Ford Bronco EV: மின்சார கார்களின் புதிய பாஸ்..! 1,220 கிமீ ரேஞ்ச், பெட்ரோல் பேக்-அப், மிரட்டும் ஃபோர்ட் ப்ரோங்கோ
Ford Bronco EV: ஆட்டோமொபைல் சந்தையில் இதுவரை இல்லாத வகையில் 1,220 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கக் கூடிய, ப்ரோங்கோ மின்சார வாகனத்தை ஃபோர்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Ford Bronco EV: ஃபோர்டின் ப்ரோங்கோ நியூ எனர்ஜி காரின் பேட்டரி பெட்ரோல் இன்ஜின் கொண்டு சார்ஜ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ட் ப்ரோங்கோ மின்சார கார்:
சர்வதேச மின்சார கார் சந்தையை தனது புதிய கார் மாடலான, ப்ரோங்கோ நியூ எனர்ஜி எஸ்யுவி மூலம் ஃபோர்ட் நிறுவனம் கலக்கத்தில் ஆழ்தியுள்ளது. இந்த வலுவான மின்சார காரானது உயர்தர அம்சங்கள், ஆற்றல் திறன் மற்றும் கவனத்தை ஈர்கக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது. தேவை ஏற்படும்போது காரில் உள்ள பேட்டரியை பெட்ரோல் இன்ஜினை கொண்டும் சார்ஜ் செய்ய முடியும். கேட்போரை ஆச்சரியத்தை மூழகடிக்கக் கூடிய இந்த காரின் அம்சங்கள், செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஃபோர்ட் ப்ரோங்கோ பவர் ஆப்ஷன்கள்:
ஃபோர்ட் ப்ரோங்கோ நியூ எனர்ஜி எஸ்யுவி கார் மாடலானது இரண்டு ஆற்றல் கான்பிகரேஷனில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. ஒன்று முற்றிலும் மின்சார எடிஷன் மற்றொன்று எக்ஸ்டென்டட் ரேஞ்ச் மின்சார வாகனம் (Extended Range Electric Vehicle - EREV) ஆகும். இரண்டாவது எடிஷனானது பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. ஆனால், இது வாகனத்தை இயக்குவதற்கானது அல்ல. மாறாக தேவை ஏற்படும்போது பேட்டரியை சார்ஜ் செய்வதற்கானது ஆகும். இதன் மூலம் அருகில் சார்ஜிங் நிலையங்கள் இல்லாவிட்டாலும் எந்தவித அச்சமும் இன்றி தொலைதூர பயணங்களை தாராளமாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
ஃபோர்ட் ப்ரோங்கோ - ரேஞ்ச் & ஸ்பீட்
ப்ரோங்கோவின் முழு எலெக்ட்ரிக் எடிஷனானது ஆல் வீல் ட்ரைவ் அம்சத்துடன் இரட்டை மோட்டார் அமைப்பை கொண்டுள்ளது. இதில் முன்பக்கமுள்ள மோட்டார் 117hp ஆற்றலையும், பின்பக்கமுள்ள மோட்டார் 275hp ஆற்றலையும் உற்பத்தி செய்ய, மொத்தமாக 311hp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதி அதிகபட்சமாக மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. BYD கார் மாடலில் உள்ள 105.4KWh LFP பிளேட் என்ற மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 650 கிலோ கீட்டர் மைக்லேஜ் வழங்கும் என ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ADAS தொழில்நுட்பம் மற்றும் விண்ட்ஷீல்டில் LiDAR யூனிட்டையும் கொண்டுள்ளது.
ஃபோர்ட் ப்ரோங்கோ - EREV அம்சங்கள்
இந்த எடிஷனிலும் இரண்டு மோட்டார்கள் உள்ளன. முன்பகுதியில் உள்ள மோட்டார் 177hp ஆற்றலையும், பின்புறம் உள்ள மோட்டார் 245hp ஆற்றலையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. கூடுதலாக 150hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெற்றுள்ளது. இது வாகனத்தை இயக்குவதற்காக அன்றி, அதில் இடம்பெற்றுள்ள பேட்டரியை சார்ஜ் செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 43.7KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும். ஆனால், பெட்ரோல் மற்றும் பேட்டரி ரேஞ்சை முழுமையாக இணைத்தால் இந்த காரானது ஆயிரத்து 220 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என ஃபோர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபோர்ட் ப்ரோங்கோ - வடிவமைப்பு
ஃபோர்ட் மற்றும் ஜியாங்லிங் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஃப்ரோங்கோ எஸ்யுவி உருவாக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 25 மில்லி மீட்டர் நீளம், ஆயிரத்து 815 மில்லி மீட்டர் உயரம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 950 மில்லி மீட்டர் வீல் பேஸை கொண்ட இந்த காரின் மொத்த எடை 2 ஆயிரத்து 630 கிலோ ஆகும். அளவீடுகளின் அடிப்படையில், இந்த காரானது கியா EV9 கார் மாடலுடன் ஒத்துப்போகிறது. இதுபோக, இந்த EREV காரானது மின்சார கார்களிலும் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ஃபோர்ட் ப்ரோங்கோ - விலை, வெளியீடு
கூட்டு முயற்சியின் விளைவாக ஃப்ரோங்கோ கார் மாடலானது முதலாவதாக, சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால், இதன் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சிறப்பு டிசைனை கருத்தில் கொண்டால், காலப்போக்கில் இந்த கார் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, நடப்பாண்டின் நான்காவது காலாண்டில் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ள ஃப்ரோங்கோ கார் மாடலின் தொடக்க விலை 48 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஃபோர்ட் ப்ரோங்கோ: இந்தியாவின் கிடைக்குமா?
இந்திய சந்தையில் தனது கார் மாடல்களின் விற்பனையை ஃபோர்ட் நிறுத்திவிட்ட நிலையில், விரைவில் தனது எவரெஸ்ட் எஸ்யுவி மூலம் திரும்ப வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்காலத்தில் ஃப்ரோங்கோவும் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படலாம்.
இதனிடையே, இதே EREV தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாருதி சுசூகி நிறுவனமும் புதிய காரை வடிவமைத்து வருகிறதாம். அதன் மூலம், விரைவில் மலிவு விலை மின்சார கார் ஒன்றும் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படலாம்.






















