நெல்லையில் ஆளுங்கட்சி கவுன்சிலர் ராஜினாமா கடிதம்..! என்ன நடந்தது? - முழு தகவல் இதோ
ஆணையரிடம் வழங்கினால் செல்லாது என தெரிந்தே கடிதம் கொடுத்திருக்கலாம், ஆணையருக்கு வழங்கியதில் ஆணையராக குறிப்பிட்டிருப்பதும் தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணன் பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் இருந்தே கவுன்சிலர்களுக்கும், மேயருக்குமிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்கள், தர்ணாக்கள், கூட்டம் புறக்கணிப்பு என அனைத்தையும் தாண்டி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கவுன்சிலர்களால் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பின்னும் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டும் கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் மேயரின் பதவி தப்பியது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டு மாமன்ற கூட்டங்களில் ஒரு கூட்டம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இரவிலும் கூட்டம் நீடித்தது. 8 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடந்தது. அதன் பின் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை, இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று நெல்லை மாநகராட்சியின் 7 வது வார்டு உறுப்பினர் இந்திரா மணி என்பவர் மாநகராட்சி அலுவலத்திற்கு தனது கணவருடன் சென்று ஆணையர் அலுவலகம் முன்பு அமர்ந்து தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும், எந்த ஒரு திட்டங்களும் செயல்படவில்லை எனக்கூறி கையில் கடிதத்துடன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். ஆணையர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்திருந்த அவர்களிடம் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர்கள் உள்ளே சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். தொடர்ந்து கவுன்சிலர் இந்திரா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்களும் பலமுறை போராடிவிட்டோம். எந்த பணியும் எங்கள் வார்டில் நடைபெறவில்லை. எங்கள் வார்டு தொடர்பான ஆவணங்களை மட்டும் ஒழித்து வைக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். கேட்டால் கட்சியில் பிரச்சனை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். எனவே பொறுப்பு அமைச்சரிடம் கூறினால் அவரும் காதில் வாங்கிக்கொள்வதில்லை. மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் ராஜினிமா செய்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் ஆணையாளரை சந்தித்து பேசியபோது, "முறைப்படி கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை மேயரிடம் தான் வழங்க வேண்டும் என்பதால் இந்த ராஜினாமா கடிதம் செல்லாது என்றும் சம்பந்தப்பட்ட ஏழாவது வார்டில் பல்வேறு பணிகள் நடந்து வருவதாகவும் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தகவல் தெரிவித்தார். மேலும் மாமன்ற உறுப்பினர் தனது ராஜினாமாவை மேயரிடமே அளிக்க வேண்டும். அவர்தான் அதன் உண்மை தன்மையை அறிந்து அதை ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ முடியும். என்னிடம் கடிதம் அளித்தால் அது செல்ல தக்கது அல்ல. ஏழாவது வார்டில் கடந்த ஓராண்டில் 90 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு சாலைகள் மழை நீர் கால்வாய்கள் கழிவுநீர் ஓடைகள் உள்ளிட்ட 8 பணிகள் நடந்து முடிந்துள்ளது. 7வது வார்டில் பணிகள் நடைபெறவில்லை என்பது தவறான தகவல். ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்வி நிதியிலிருந்து பள்ளி கட்டிடம் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. ஒரு கோடியே 98 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது" என்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தன்னிடம் வழங்கியது செல்லாது என ஆணையர் தகவல் தெரிவித்தார். ஆணையரிடம் வழங்கினால் செல்லாது என தெரிந்தே கடிதம் கொடுத்திருக்கலாம் எனவும், ஆணையருக்கு வழங்கிய கடிதத்தில் அனுப்புனரே ஆணையராக குறிப்பிட்டிருப்பதும் தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.