Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆட்சி அதிகாரம் குறித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்து சூசக பதிலை கூறியுள்ளார். அவர் என்ன சொன்னார் தெரியுமா.?

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது பேசுபொருளாக உள்ளது அதிமுக கூட்டயி குறித்த தகவல்கள் தான். இந்நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து நேற்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்த கேள்விக்கும் சூசக பதிலை அளித்துள்ளார். அவர் பேசிய விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
“அதிமுக தனித்தே ஆட்சி - அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி“
சென்னையில் நேற்று பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் என்ற உறுதிபடக் கூறினார். அதிமுக - பாஜக கூட்டணியை அமைத்தது அமித் ஷா தான் என்றும், அவர் சொல்வது போலத்தான் ஆட்சியும் நடக்கும் என்று கூறிய அண்ணாமலை, கூட்டணி ஆட்சிதான் என்பதை பல முறை அமித் ஷா தெரிவித்துவிட்டதாகவும் விளக்கமளித்தார்.
மேலும், அமித் ஷா சொன்னதை தான் மாற்றிக் கூற இயலாது என்றும், அவ்வாறு செய்தால், தான் பாஜக தொண்டனாக, தலைவனாக இருப்பதில் எந்த அர்த்தமுமில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அதனால், தலைவர் கூறியதற்கு வலு சேர்ப்பதே தன்னுடை பணி என்றும், அதனால், கூட்டணி ஆட்சி என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சூழலில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்றும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தான் சொல்வதே இறுதியான முடிவு என்றும் ஏற்னவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றும், அதே சமயம், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறி, தன்னுடைய தனித்தே ஆட்சி என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.
தவெக உடன் கூட்டணியா? - இபிஎஸ் பதில் என்ன.?
தொடர்ந்து, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்வி எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரமாண்ட கட்சி ஒன்று அதிமுக உடன் இணைய உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்த கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள அவர், தேர்தல் உத்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று சூசகமாக பதிலளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, விஜய் இறங்கி வந்தால், பாஜக உடன் கூட்டணியை முறித்துவிட்டு, தவெக உடன் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆக, இந்த கேள்விகளுக்கு அவர் நேரடியாக மறுப்பு தெரிவித்து பதிலளிக்காததால், பல சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
மேலும், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.




















