Navaratri Festival : பத்மநாபபுரம் நவராத்திரி திருவிழா..! தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற விக்கிரகங்கள்..! அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு..!
பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற உள்ள நவராத்திர விழாவிற்கு கன்னியாகுமரியில் இருந்து விக்கிரகங்களை கேரளாவிற்கு எடுத்துச்செல்லும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
கேரளாவில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மாற்றி சுவாமி விக்ரகங்களை இரு மாநில போலீஸ் அணி வகுப்பு மரியாதையுடன் கேரளாவிற்கு பவனியாக எடுத்து செல்லும் பாரம்பரிய நிகழ்வு lநடைபெற்றது. இந்த பாரம்பரிய நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு, கேரளா அமைச்சர்கள் மற்றும் இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை இருந்த போது அரண்மனை மண்டபத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்ட பிறகு பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவும் திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது
இதற்காக பாரம்பரியமாக ஆண்டு தோறும் கன்னியாகுமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி சுவாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திற்கு சென்று திரும்புவது காலம் தொட்டு பாரம்பரிய நடைமுறையாக நடந்து வருகிறது.
இந்த வருட நவராத்திரி விழாவிற்காக சுவாமி விக்கிரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து இரு மாநில போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் இன்று பவனியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக, பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனை உப்பரிகை மாளிகையில் வைத்து நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் மன்னரின் உடைவாளை பெற்று கேரளா இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தனர் இதில் இரு மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தொடர்ந்து தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் பவனியாக திருவனந்தபுரம் செல்லும் சுவாமி விக்ரகங்கள் 25-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது
அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் வைக்கப்படும் சுவாமி விக்ரகங்கள் விஜயதசமி முடிந்த பின்னர் பவனியாக மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது