மயிலாடுதுறையில் 9 பிர்க்காக்களுக்கு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு - காப்பீடு செய்வது எப்படி?
மயிலாடுதுறை மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு 9 பிர்க்காக்களுக்கு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, நெல் தரிசில் பருத்தி பயிர் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான ராபி பருவத்தில், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் (AICIL -Agricultural Insurance Company of India Limited) நிறுவனம், பருத்தி பயிருக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயிர் காப்பீட்டின் அவசியம்
விவசாயம் என்பது பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு உட்பட்டது. பருவநிலை மாற்றங்கள், பூச்சி தாக்குதல்கள், இயற்கை பேரிடர்கள் போன்ற காரணங்களால் பயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுகிறது. எனவே, பயிர் காப்பீடு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது.
பிர்க்காக்கள்
இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 9 பிர்க்காக்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
- மாதானம்
- புத்தூர்
- சீர்காழி
- மேலையூர்
- தில்லையாடி
- செம்பனார்கோயில்
- திருவிளையாட்டம்
- வைத்தீஸ்வரன்கோயில்
- திருவெண்காடு
இந்த பிர்க்காக்களில் உள்ள வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
காப்பீடு செய்வதற்கான கடைசி நாள்
பருத்தி பயிருக்கான காப்பீடு செய்வதற்கு மார்ச் 31, 2025 வரை கால அவகாசம் உள்ளது. எனவே, விவசாயிகள் விரைவாக காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம்
பருத்தி பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 18,723.89 ஆகும். இதில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 374.46 ஆகும்.
காப்பீடு செய்வது எப்படி?
விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், பொது சேவை மையங்களையும் அணுகி காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்:
- பதிவு விண்ணப்பம்
- கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் (பசலி - 1433)
- வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
- ஆதார் அட்டை நகல்
விவசாயிகள் கவனத்திற்கு
காப்பீடு செய்யும் போது, சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், காப்பீடு செய்ததற்கான ரசீதை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். பதிவு செய்த விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிக்குள் திருத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், ராபி பருவ பருத்தி பயிருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைந்து, எதிர்பாராத மகசூல் இழப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், விவசாயிகள் முன்கூட்டியே காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் விபரம் அறிய
கூடுதல் தகவல்களுக்கு, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். செல்வம், 97900 04303 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

