IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: 18வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இனறு கொல்கத்தாவில் தொடங்கியது. கொல்கத்தா அணிக்கு முதன்முறையாக ரகானேவும், பெங்களூர் அணிக்கு கேப்டனாக முதன்முறையாக ரஜத் படிதாரும் களமிறங்கினார். கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு நடக்கும் போட்டி என்பதால் முற்றிலும் புதிய வீரர்களுடன் இந்த தொடர் தொடங்கியது.
ஆட்டத்தை மாற்றிய குருணல்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் படிதார் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் ஓவரிலே அபாயகரமான டி காக்கை 4 ரன்னில் ஹேசில்வுட் அவுட்டாக்கினார். அதன்பின்னர், ஜோடி சேர்ந்த சுனில் நரைன் - கேப்டன் ரஹானே ஜோடி அபாரமாக ஆடியது. இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் படிதார் ஹேசில்வுட், யஷ்தயாள், ரஷீக்தார், சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா என பலரையும் பயன்படுத்தினார்.
ஆனால், கேப்டன் ரஹானே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். இதனால், கொல்கத்தாவின் ரன்ரேட் 10 ரன்கள் வீதம் சென்றது. இளம் வீரர் ரஷீக்தார் தனது பந்துவீச்சில் அதிரடி காட்டிய சுனில் நரைனை அவுட்டாக்க ஆட்டத்தில் மாற்றம் வந்தது. அதன்பின் ஆட்டத்தில் குருணல் பாண்ட்யா மாற்றத்தை ஏற்படுத்தினார்.
175 ரன்கள் டார்கெட்:
அவரது சுழலில் ரஹானே 56 ரன்னில் அவுட்டாக, வெங்கடேஷ் ஐயர் 6 ரன்னிலும், ரிங்குசிங் 12 ரன்னிலும், ரஸல் 4 ரன்னிலும் அவுட்டாக 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணி 174 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுத்தது.
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - பில் சால்ட் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். குறிப்பாக, பில் சால்ட் பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு விராட் கோலியும் மறுமுனையில் ஒத்துழைப்பு அளித்தார்.
பிழிந்தெடுத்த பில் சால்ட்:
வைபவ் அரோரா, ஜான்சன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன் என மாறி, மாறி பயன்படுத்தியும் இந்த ஜோடி ரன்வேட்டை நடத்தியது. வருண் சக்கரவர்த்தி முதல் ஓவரிலே 21 ரன்களை விட்டுக்கொடுத்தார். 8 ஓவர்களில் 95 ரன்களை எடுத்தபோது பில் சால்ட் 31 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் விராட் கோலி அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார்.
படிதார் அதிரடி:
இம்பேக்ட் ப்ளேயராக வந்த படிக்கல் 10 ரன்னில் அவுட்டானாலும், ஆட்டம் பெங்களூரின் கைவசமே இருந்தது. அடுத்து வந்த கேப்டன் படிதார் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி பெங்களூரை வெற்றியின் அருகில் கொண்டு சென்றார். வெற்றியின் அருகில் சென்ற போது கேப்டன் படிதார் அவுட்டானார். ஆர்சிபி கேப்டன் படிதார் 16 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 5 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்கள் அதிரடியாக எடுக்க 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
கோலி அபார பேட்டிங்:
இதன்மூலம் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலே ரஜத் படிதார் வெற்றியுடன் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 36 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றி மூலம் பெங்களூர் அணி புத்துணர்ச்சியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

