![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காலியாக கிடந்த இருக்கைகள்... என்னப்பா இது ராஜராஜ சோழன் சதய விழாவுக்கு நேர்ந்த சோதனை
காலையில் நடந்த நிகழ்ச்சிக்காக அரங்கத்தில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் போட்டு இருந்தன. கால் பகுதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. பக்தர்களும் ஏதே நிகழ்ச்சி நடக்கிறது என்று எட்டி பார்த்து சென்று விட்டனர்.
![காலியாக கிடந்த இருக்கைகள்... என்னப்பா இது ராஜராஜ சோழன் சதய விழாவுக்கு நேர்ந்த சோதனை Thanjavur news Rajaraja Cholan The ordeal of the Sadaya festival TNN காலியாக கிடந்த இருக்கைகள்... என்னப்பா இது ராஜராஜ சோழன் சதய விழாவுக்கு நேர்ந்த சோதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/09/9c57ae1828339a4822c4183601c36c611731148018236733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இருப்பினும் மதியம் 12 மணி வரை நிகழ்ச்சி அரங்கத்தில் நூற்றுக்கணக்கில் சேர்கள் காலியாக இருந்தது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதய விழா இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது.
மங்கல இசையுடன் தொடங்கிய சதய விழா
இன்று காலை 8.30 மணிக்கு இறைவணக்கம் அதை தொடர்ந்து மங்கல இசை, திருமுறை அரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து பழனி ஆதீனம் குரு மகா சன்னிதானம் சீர் வளர்சீர் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதையடுத்து வரலாறாக வாழும் மாமன்னன் இராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பழங்கால இசைக்கருவிகளோடு 1039 நாட்டிய கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பன்முக இராசராசனை பாடுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி அளவில் மாமன்னன் ராசராச சோழனின் நிலைத்த பெரும் புகழுக்கு காரணம் அவரது நிர்வாகப் பணியா? கலைப் பணியா ? என்ற தலைப்பில் தமிழ் இனிமை பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இரவு 9.30 மணியளவில் நவீன தொழில்நுட்பத்தில் சதய நாயகன் ராசராசன் என்ற வரலாற்று நாடகம் நடக்கிறது.
உட்காருவதற்கு ஆட்கள் இன்றி காலியாக கிடந்த இருக்கைகள்
காலையில் நடந்த நிகழ்ச்சிக்காக அரங்கத்தில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் போட்டு இருந்தன. ஆனால் இதில் கால் பகுதி இருக்கைகள் கூட நிரம்ப வில்லை. கோயிலுக்கு வந்த பக்தர்களும் ஏதே நிகழ்ச்சி நடக்கிறது என்று எட்டி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர். விழா அழைப்பிதழில் பெயர் போடப்பட்டு இருந்தவர்கள் வந்து இருந்தால் கூட இருக்கைகள் பாதியளவில் நிரம்பி இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களும் சதய விழாவில் பங்கேற்பது போல் செய்ய வேண்டும். அவர்களுக்கு சதயவிழா பற்றி தெரிவித்து அமர செய்து இருக்க வேண்டும். விழா குழுவினர் இதில் இனியாவது கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நாளை 2ம் நாள் நிகழ்ச்சியில் மாலை அணிவிப்பு
சதய விழாவில் இரண்டாம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதன் பின்னர் கோவில் பணியாளர்களுக்கு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் புத்தாடை வழங்குகிறார். அதன் பின்னர் மாமனன் ராசராச சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு கட்சி,அமைப்பு, இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கின்றனர். காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் திருஉலா நடைபெறும். அதன் பின்னர் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.
பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு
தொடர்ந்து பிற்பகலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும். மாலை 4 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தேவார பண்ணிசையும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு "உலகம் வியக்கும் மாமன்னன் ராசராசன் " 1039 கலைஞர்கள் பங்கு பறும் சிறப்பு நாட்டியம் நடைபெறும். 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கும். இரவு 7 மணிக்கு மாமன்னர் ராசராசன் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். சதய விழா காணவரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)