Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
''பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்டது தவறு. அவரின் கண்ணியம் காக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று இடைக்காலமாக உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக் வெடித்துள்ளது. இதுதொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவு
இந்த வழக்கில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதிகள், உத்தரவிட்டு இருந்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறும்போது, வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ஐ.பி.எஸ் அதிகாரிகளான சினேக பிரியா, அய்மான் ஜமால் மற்றும் பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு இயங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கூறிய நீதிபதிகள், ’’முதல் தகவல் அறிக்கையில் கண்ணியம் காக்கப்படவில்லை. இப்படி செய்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி புகார் அளிக்க முன்வருவர்?
காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை
உரிய அனுமதி பெறாமல் செய்தியாளர் சந்திப்பு நடத்திய காவல் ஆணையர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை வெளியிட்டது தவறு. அவரின் கண்ணியம் காக்கப்படவில்லை. இடைக்கால நிவாரணமாக மாணவிக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியிடம் அவர் படித்து முடிக்கும் வரை கல்விக் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது. தைரியமாக செயல்பட்ட மாணவிக்கு வாழ்த்துகள்’’.
இவ்வாறு கூறி சிபிஐ விசாரணை கோரிய வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதையும் வாசிக்கலாம்: Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்