பாரம்பரியமிக்க கலம்காரி ஓவியத்தை எப்படி வரையலாம்..? - தஞ்சையில் நடந்த பயிற்சி
புராணக் கதைகளை இயற்கை மூலிகை வண்ணங்களைத் தழுவி துணிகளில் வரையும் ஓவியமே கருப்பூர் கலம்காரி ஓவியமாகும். இது 350 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தை கொண்டது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் கருப்பூர் கலம்காரி ஓவிய செயல்முறை பயிற்சி நடந்தது. இதில் தஞ்சை உட்பட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த 60க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாதம்தோறும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் செயல்விளக்க பயிற்சியை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கருப்பூர் கலம்காரி ஓவிய செயல்முறை பயிற்சி தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் நடந்தது.
புராணக் கதைகளை இயற்கை மூலிகை வண்ணங்களைத் தழுவி துணிகளில் வரையும் ஓவியமே கருப்பூர் கலம்காரி ஓவியமாகும். இது 350 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தை கொண்டது. தேர்ச் சீலைகள், தோரணங்கள் மற்றும் கோயில்களில் பயன்படும் இந்த ஓவியங்கள், காடா துணியில் முழுக்க கைகளால் மட்டுமே தீட்டப்படுகின்றன. மூங்கில், ஈச்சம், பனை மற்றும் தென்னை மரக் குச்சிகளால் இயற்கை வண்ணங்களை தயாரித்து கருப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஓவியங்கள் தீட்டப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற கருப்பூர் கலம்காரி ஓவியத்திற்கான பயிற்சியை திருப்பனந்தாள் ஒன்றியம் சிக்கல்நாயக்கன்பேட்டையைச் சேர்ந்த கருப்பூர் கலம்காரி ஓவியர் ராஜமோகன் எம்பெருமாள் வழங்கினார். இதை சரஸ்வதி மஹால் நூலகத்தின் முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் தொடக்கி வைத்து கலம்காரி ஓவியத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
பயிற்சியில் தஞ்சாவூர் நகர் பகுதி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கருப்பூர் கலம்காரி ஓவியத்தின் பாரம்பரியத்தையும், இயற்கை மூலிகை வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை தயாரிக்கும் முறை குறித்தும் செயல்முறையாக பயிற்சி பெற்றனர்.
கலம்காரி ஓவியத்தை புதுமையாக ராஜமோகன் எம்பெருமாள் நவீன ஓவிய முறைகளையும் சேர்த்து, இதற்கு புத்துணர்வு கொடுத்து வருகிறார். தற்போது சிறிய அளவிலான ஓவியங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டில் பாரம்பரிய கைவினைப் பொருள் செய்முறை விளக்கப் பயிற்சியில் இது 12 வது மாத பயிற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. பயிற்சியில் பங்கேற்றவர்கள், குறிப்பாக மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகள், இக்கலையைப் பற்றி தெரிந்து கொண்டு செயல்விளக்க பயிற்சி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.
பயிற்சி ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.
கலம்காரி என்பது கையால் வரையப்பட்ட அல்லது பிளாக் அச்சிடப்பட்ட பருத்தி துணிகளின் பாரம்பரிய இந்திய கலை வடிவமாகும். இது சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றியது. பாரசீக வார்த்தைகளான ' கலாம் ' என்றால் பேனா மற்றும் 'கரி ' என்றால் கைவினைத்திறன் என்பதிலிருந்து பெறப்பட்டது. இது "பேனா-வேலை" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது தென்னிந்தியாவில் முக்கியத்துவம் பெற்றது. அங்கு மதக் கதைகள் மற்றும் கோயில் கலைகளை சித்தரிக்க இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த பழங்கால கலை வடிவமானது புராணக் கதைகள், மத இதிகாசங்கள் மற்றும் இயற்கையின் கருக்கள் ஆகியவற்றின் சிக்கலான மற்றும் தெளிவான சித்தரிப்புக்காக அறியப்படுகிறது. இவை அனைத்தும் இயற்கை அல்லது கரிம சாயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் கலம்காரி அதன் காலத்தால் அழியாத அழகு மற்றும் கைவினைத்திறனுக்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.