உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
"வீட்டிலிருந்தபடியே குடிநீர் தரத்தை பரிசோதிப்பது, எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்"

மனிதனுக்கு மிக முக்கிய தேவை 'தண்ணீர்'. குடிப்பதற்கு மட்டுமில்லாமல் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும், தண்ணீர் மிக முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் நோய் தொற்று எளிதாக பரவி வடும். எனவே தண்ணீரில் தரம் என்பது மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.
நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பது குறித்து, அறிந்து வைத்துக் கொள்வது முக்கியம். இதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஒரு சில வழிமுறைகளை வைத்து தண்ணீரில் சுத்தத்தை தெரிந்து கொள்ளலாம்.
சோப்பு நுரை சோதனை
பொதுவாக நம் வீடுகளில் அம்மாக்கள் இந்த முறையை பயன்படுத்தியே தண்ணீரின் சுத்தத்தை தெரிந்து கொள்வார்கள். தண்ணீரில் சோப்பு தூள்களை கலந்து பாருங்கள். நுரை அதிகம் வந்தால் கடினத்தன்மை குறைவாக இருக்கக்கூடிய தண்ணீர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தண்ணீர் நல்ல தண்ணீராக பார்க்கப்படுகிறது. நுரை வரவில்லை என்றால், அதில் உப்பு அல்லது வேறு ஏதாவது கலப்படங்கள் இருப்பது உறுதி செய்து கொள்ளலாம்
நிறம், வாசனை மற்றும் சுவை சோதனை
தண்ணீரை முகர்ந்து பாருங்கள், ஏதாவது வாசனை வந்தால் அது சுத்தம் இல்லாத தண்ணீர் என்பதை குறிக்கும். தண்ணீருக்கு சுவை என்பது கிடையாது, தண்ணீரை குடித்து பார்த்தால் அதில் உலோக சுவை அல்லது உப்பு ஆகியவை இருந்தால் அந்த தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கண்ணாடி டம்ளரில் தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை வெளிச்சத்தில் வைத்து பாருங்கள். தண்ணீருக்கு நிறம் கிடையாது. ஒருவேளை தண்ணீரில் நிறம் இருந்தால், இரும்பு அல்லது களிமண் போன்ற ஏதேனும் கலந்து இருக்க வாய்ப்புள்ளது.
கறை சோதனை
சமையல் பாத்திரங்கள் கழுவிய பிறகு காய விடுங்கள். காய்ந்த பிறகு அதில் திட்டு திட்டாக, வெள்ளை நிறத்தில் ஏதாவது உருவாகுகிறதா? என்பதை பாருங்கள். அது போன்று பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், உங்கள் தண்ணீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பொருட்கள் கலந்து இருக்கலாம்.
வீழ்படிவு சோதனை (Settling Test)
கண்ணாடி பாட்டில் அல்லது வெள்ளை நிற பாட்டிலில் 2 லிட்டர் அல்லது 1 லிட்டர் தண்ணீரை பிடித்து வைத்து விட வேண்டும். இரவு முழுவதும் அதை அசைக்காமல் ஒரு இடத்தில் தனியாக வைத்து விடவும். மறுநாள் காலை எழுந்து பார்க்கும்போது, தண்ணீர் தெளிவாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதற்கு கீழே ஏதாவது படிமங்கள் (Settling) படிந்து இருந்தால் அந்த தண்ணீர் சுத்த மற்ற தண்ணீராக இருக்கலாம்.
பனிப்புகை (Fog) சோதனை
டம்ளரில் தண்ணீரைப் பிடித்து ஃப்ரிட்ஜில் சில மணி நேரங்கள் தண்ணீரை வைத்து விடுங்கள். அதன் பிறகு தண்ணீரை எடுத்து வெளியில் பாருங்கள். நீங்கள் வைத்த தண்ணீர் டம்ளர் உள்பகுதியில், பனிப்புகை போன்று படிவம் உருவானால் அதில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது.
பி.எச்.சோதனை (PH Test)
பி.எச் சோதனை செய்து கொள்வது அறிவியல் பூர்வமணதாக பார்க்கப்படுகிறது. பி.எச் பேப்பர்கள் அனைத்து மருந்து கடைகளிலும் இந்த பேப்பர்கள் கிடைக்கும். விலை ரூ.50 இலிருந்து 100 ரூபாய்க்குள் தான் இருக்கும். அந்த பேப்பரை வாங்கி தண்ணீரில் நினைத்து நிறம் மாறுகிறதா? என்பதை சோதனை செய்து பாருங்கள்.
பி.எச் வாங்கும் போது சோதனை அட்டவணை தங்களிடம் கொடுப்பார்கள். அதில் குடியிருக்கு 6.5 முதல் 8.5 வரை இருக்கலாம். 7 அல்லது 7.5 இருந்தால் உத்தமம்.
இது போன்ற சோதனைகளை வைத்து வீட்டில் இருந்தபடியே தண்ணீரில் சுத்தத்தை நாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.





















