கொள்ளிடம் கரையை பகுதியை பலப்படுத்த ரூ. 120 கோடியில் புதிய திட்டம் - அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கரையை பகுதியை பலப்படுத்த 120 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமாரமங்கலம் முதல் அளக்குடி வரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் ஆதனூர் இடையே கட்டப்பட்டு வரும் கதவணை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து அமைச்சர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு உட்பட்ட குமாரமங்கலம், மணல்மேடு, அளக்குடி, முதலைமேடு, நாதல்படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிட கரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அளக்குடி பகுதியில் கொள்ளிடக் கரையை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு கரையை பலப்படுத்த நிரந்தர தீர்வு காண்பதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரின் வரத்து அதிகரித்தால் தேவைக்கு ஏற்ப மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்