OP Sindoor Parliament: நெருப்பு மழையாய் கேள்விகள், வாய் திறப்பாரா மோடி? நேருவை இழுக்குமா பாஜக அரசு?
OP Sindoor Parliament: நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக எழுப்ப எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டுள்ள கேள்விகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

OP Sindoor Parliament: நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக, இன்று சிறப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம்:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஆனால், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் குடியரசு துணை தலைவரின் திடீர் ராஜினாமா ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான், இன்று மக்களவையிலும்,நாளை மாநிலங்களவையிலும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்காக 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அவையிலும் தலா மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அரசு இதுவரை பதில் அளிக்காத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் பட்டியல்:
பஹல்காம் தாக்குதல் மற்றும் ராணுவ நடவடிக்கையான ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக ஏராளமான கேள்விகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டவும் வலியுறுத்தின. இந்நிலையில், விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பல முக்கிய கேள்விகளை கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்த வகையில் தற்போது வரை விடையின்றி தொடரும் கேள்விகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதல் & ஆப்ரேஷன் சிந்தூர் - 5 முக்கிய கேள்விகள்:
- உளவுத்துறையும், பாதுகாப்பு அமைப்பும் பஹல்காம் தாக்குதலை தடுப்பதில் தோல்வியுற்றது ஏன்?
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை கைது செய்யப்படாதது ஏன்?
- பாகிஸ்தான் உடன் ஆன ஆயுத தாக்குதலில் இந்தியாவின் கை ஓங்கி இருந்திருந்தால், தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது ஏன்?
- இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழுத்தத்தால் கொண்டு வரப்பட்டதா?
- ஆப்ரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் எத்தனை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? சேதம் எவ்வளவு?
பஹல்காம் தாக்குதலுக்கு வழிவகுத்த தோல்விகள் என்ன?
மூன்று நிலைகளில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்விகள் காரணமாகவே பஹல்காம் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
- பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் வழக்கமாக அமர்நாத் யாத்திரைக்கு முன்பு ஜூன் மாதத்தில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். ஆனால் இந்த ஆண்டு, பாதுகாப்பு அமைப்பினருக்கு தெரிவிக்காமல் ஏப்ரல் 20 அன்று திறக்கப்பட்டது ஏன்?
- அதிக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைப் படையினரால் கவனிக்கப்படாமல் இந்தியப் பகுதிக்குள் ஆழமாக ஊடுருவியது எப்படி?
- தாக்குதல் நடத்தியவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்களின் மதத்தைக் கேட்டனர், மேலும் இஸ்லாமிய வசனங்களைச் சொல்லி துப்பாக்கிச் சூடு நடத்தினர், பின்னர் சுமார் 20 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனாலும், பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு செல்லாதது ஏன்?
இந்த மோசமான தாக்குதல் நடந்த பிறகும் கூட உளவுத்துறையின் தலைவர் தபன் குமார் தேகாவின் பதவிக்காலத்தை மத்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது, எதிர்க்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
3 மாதங்களாகியும் தீவிரவாதிகள் பிடிபடாதது எப்படி?
தாக்குதல் நடந்து 3 மாதங்கள் ஆன நிலையில், இதில் தொடர்புடையை ஒருவர் கூட தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இதில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது புகைப்படங்களும் வெளியிடப்பட்டும் கூட ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. விசாரணை எதுவரை சென்றுள்ளது? எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது? தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டது? என்பது தொடர்பான எந்தவித தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
ட்ரம்பின் அழுத்தமா?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதாக, மே 10ம் தேதியன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்பிறகே இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக, அணு ஆயுதங்களை கைவசம் வைத்துள்ள இருநாடுகளுக்கும் இடையேயான போரை, வர்த்தகத்தை முன்னிலைப்படுத்தி தானே முடிவுக்கு கொண்டு வந்ததாக 20-க்கும் அதிகமான முறை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளது. அப்படியெனில், நமது நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா எப்படி தலையிடலாம்? இதற்கு மோடி எப்படி அனுமதித்தார்? என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன. அடிபணிந்து செல்வதே ஆர்எஸ்எஸ் வழி வந்த பாஜகவின் வரலாறாக உள்ளது எனவும் காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது. ஆனால், இதுகுறித்து பிரதமர் மோடி தற்போது வரை வாய் திறக்கவில்லை.
ரஃபேல் விமானங்களை இழந்தோமா?
ஆப்ரேஷன் சிந்தூரின் போது சில விமானங்களை இந்தியா இழந்ததாக ராணுவ அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். அதில் ரஃபேல் விமானமும் அடங்குமா? என்பதே தற்போது பிரதான கேள்வியாக உள்ளது. அரசியல் தலைவர்களில் அறிவுறுத்தல் காரணமாகவே சில இழப்புகளை சந்தித்ததகாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமர் மோடி வாய் திறப்பாரா?
வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பாரா? என்பதே பலரின் எதிர்பாப்பாக உள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி பங்கேற்றாலும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், நேரு செய்த தவறு என பழைய புராணத்தை தான் மீண்டும் பாடுவார் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





















