Aadi Amavasai 2025: இன்று ஆடி அமாவாசை.. புண்ணிய நதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! கடலென திரண்ட பக்தர்கள்
Aadi Amavasai 2025: ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் புண்ணிய நதிகளில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.

Aadi Amavasai 2025: ஆடி மாதம் என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும் சூழலில், ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதால் அவர்களின் ஆசி நமக்கு கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இன்று ஆடி அமாவாசை:
இன்று தமிழ்நாடு முழுவதும் ஆடி அமாவாசை வழிபடப்படுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகிய 3 நாட்கள் மிகவும் உகந்த நாட்கள் ஆகும். இதன்படி, இன்று காலை முதலே பலரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்:
புண்ணிய நதிகளின் கரைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து நீராடி வருகின்றனர். முன்னாேர்களுக்கு த்ர்ப்பணம் அளிப்பதற்கு பலரின் முதல் தேர்வாக ராமேஸ்வரமே உள்ளது. இதனால், அதிகாலை முதலே ராமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் அளித்து வருகின்றனர். சில இடங்களில் பக்தர்கள் கூட்டமாக அமர்ந்து தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.

தர்ப்பை புல், அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் பூஜைப் பொருட்களும் வைத்து அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி அளித்து வருகின்றனர். ராமேஸ்வரம் மட்டுமின்றி காவிரி நதிக்கரையிலும், மதுரையில் வைகை நதிக்கரையிலும் என தமிழ்நாட்டின் முக்கிய நதிகளின் கரைகளில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வருகின்றனர்.
போலீசார் சிறப்பு ஏற்பாடு:
பக்தர்கள் கட்டுக்கடங்காத அளவில் குவிந்து வரும் சூழலில், அவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ராமேஸ்வரம் கடலிலும், காவிரி நதியிலும் பக்தர்கள் தொடர்ந்து நீராடி வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் அளிப்பதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி சென்னை, மதுரை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவை என பல நகரங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை:
தர்ப்பணம் அளிப்பது மட்டுமின்றி முன்னோர்களை வேண்டி இன்று படையலிடுவதும் வழக்கம் ஆகும். இதனால், காய்கறி சந்தைகளில் இன்று காய்கறிகள், பழங்கள், பூக்களின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருகிறது. விற்பனை அதிகளவில் இருக்கும் என்பதால் நேற்று முதலே தொடர்ந்து அதிகளவில் காய்கறிகள் வழக்கத்தை காட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயம்பேடு, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் மாவட்டச் சந்தைகளில் காலை முதலே விற்பனை சூடுபிடித்துள்ளது.
மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான கோயில்களில் காலை முதலே பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.





















