Tamil Nadu’s Amma canteen | அம்மா உணவகம் வெறும் அரசுத் திட்டமல்ல.. பசியாறிய இடம் - பரபரக்கும் சோஷியல் மீடியா..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மகத்தான ஒரு திட்டம்தான் அம்மா உணவகம். இதை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். அது பல பேரின் பசியாற்றிய ஒரு திட்டம்.
காலை முதல் சோஷியல் மீடியா முழுவதும், அம்மா உணவகம் குறித்து பரபரக்கிறது. அம்மா உணவகம் சூறையாடப்பட்டதை கண்டு பசியாறிய வயிறுகள் படபடக்கின்றன. அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் சிலர் மீது கட்சி பாகுபடின்றி கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக கட்சி தலைமையும் உணவகத்தை சூறையாடிய நபர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. அம்மா உணவகத்தை காப்போம் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்படுகின்றன. இப்படி பலரையும் பதைக்க வைத்திருக்கும் அம்மா உணவகம், மக்களின் மனதில் பத்தோடு பதினொன்றாக இன்னொரு அரசுத் திட்டமாக நிற்கவில்லை. அது பசியாறிய இடமாகவே நிற்கிறது.
”பொது நிர்வாகத்தில் புதுமையையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை புகுத்தும் தமிழகத்தின் செயல்பாடு, முழு நாட்டிற்கே ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு இது”. இது நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் தன்னுடைய An Uncertain Glory – India and its Contradictions என்கிற புத்தகத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு காரணமாக அவர் குறிப்பிட்டது அம்மா உணவகத்தைத்தான். அவர் தனது புத்தகத்தில் அம்மா உணவகத்துக்காக 10 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.
தமிழக அரசு பல முதல்வர்களை கண்டுள்ளது. அவரவர்கள் பல திட்டங்களை நம் மாநிலத்திற்காக கொண்டுவந்தும் உள்ளனர். சில திட்டங்கள் அவர்களுக்கானதாகவே இருக்கும். மதிய உணவுத்திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என பல திட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது. அந்த வரிசையில் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டம்தான் அம்மா உணவகம். இதை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள். பல பேரின் பசியாற்றிய ஒரு திட்டம், குறிப்பாக சென்னையில், எளியவர்களை தன் கைகளில் தாங்கிக்கொண்ட திட்டமிது.
எப்போதும் இயக்கத்தை நிறுத்தாத தலைநகரில் ''அம்மா உணவகத்தால்தான் சாப்பாடு. இல்லையென்றால் பட்டினிதான்'' என்று சொல்லிச் சென்றவர்களை நிச்சயம் பார்க்கலாம். யாரும் பசியோடு இந்நிலத்தில் சோர்ந்து நின்றுவிடக்கூடாது என்ற நோக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ஆம் ஆண்டு கொண்டு வந்த திட்டம்தான் அம்மா உணவகம். மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நிர்வகிக்கப்படும். அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் மலிவு விலையில் உணவு கிடைக்கும். தொடக்கத்தில் அரசியல் கவனத்திற்காகவோ என யோசிக்க வைத்தது அம்மா உணவகத் திட்டம். ஆனால் நாள்போக்கில் அது மக்களுக்கான திட்டம்தான் என உணரப்பட்டது. ஏழை, நடுத்தர மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது அம்மா உணவகம்.
அம்மா உணவகம் தமிழகத்தில் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் இல்லை, அது இந்தியாவிலும் பல மாநிலங்களையும் கவர்ந்தது. அதன் தாக்கம்தான் அம்மா உணவகத்தை பார்த்து ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் உணவகங்கள் திறந்து அசத்தின. சமீபத்தில் கூட புதுச்சேரியில் ரூ.5-க்கு மலிவு விலை உணவு பொட்டலம் வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை தொடங்கிவைத்தார். அதற்கெல்லாம் விதை போட்டது அம்மா உணவகம் என்றால் அது மறுப்பதற்கில்லை. கடந்த வருடம் கொரோனா கால ஊரடங்கில் அம்மா உணவகம் காலத்தின் தேவை என்பதை அனைவருமே உணர்ந்துகொண்டனர். வேலை வாய்ப்பில்லாத ஏழை மக்களுக்கும், சமையலுக்கும், உணவகங்களுக்கும் வழியில்லாத நேரத்தில் சென்னை பேச்சிலர்களுக்கும் பெரிதளவில் கைகொடுத்தது அம்மா உணவகம்தான். சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாத வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு தேவையை அம்மா உணவகம்தான் தீர்த்தது. குறிப்பிட்ட பகுதிகளுக்குள் சென்னை முழுவதும் சமையலுக்கான வசதிகளுடன் கூடிய ஒரு இடம் என்பது கொரோனா ஊரடங்கு போன்ற எதிர்பாராத காலத்தில் அரசுக்கு பெரிய அளவில் உதவி செய்தது.
அம்மா உணவகத்தால் அரசுக்கு துளியளவும் லாபம் இல்லை என்பதே உண்மை. ஆனால் திட்டங்கள் எல்லாம் லாபநோக்கத்தைக் கொண்டிருக்க முடியாது. சில திட்டங்கள் மக்களுக்கானது. அதனை அரசுதான் சமாளிக்கவேண்டும் என்பதை உணர்ந்த முந்தைய அரசு சிறப்பு நிதி ஒதுக்கி அம்மா உணவகத்தை நடத்தியது. அதன்பலனை கொரோனா காலத்தில் அரசு உணரவும் செய்தது. அம்மா உணவகத்தின் தேவையை உணர்ந்த திமுகவும், கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. இந்த நிலையில்தான் அம்மா உணவகத்தின் மீதான தாக்குதல் கவனம் பெற்றுள்ளது. மக்களுக்கான திட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது எக்காலத்திலும் தொடர வேண்டுமென்பதே பசியாறிய, பசியாறும், பசியாறப்போகும் மக்களின் ஒரே வேண்டுகோள்.