Senthil Balaji Surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணிநேரமாக நீடித்த இதய அறுவை சிகிச்சை நிறைவு
Senthil Balaji Surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவனையில் இதய அறுவைச் சிகிச்சையானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
மூன்று இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜீன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. அப்போது, அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மற்றும் ஈரோட்டில் உள்ள இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர்களும் முதலமைச்சரும் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர். அமைச்சர் கைது செய்யப்பட்டுவிட்டார் என தகவல் வெளியானதும், கரூர் மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் பாஜகவினர் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது.
இதற்கிடையில், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு ரத்த நாளத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை மருத்துவர் பரிந்துரைத்தார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைதினை உறுதி செய்தார். மேலும், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
இதன் பின்னர், நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், மனு அளிப்பட்டது, இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை 8 நாட்கள் மட்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்ததுடன், அவரது சிகிச்சைக்கு தொந்தரவு தரக்கூடாது என அறிவுருத்தியது. இதற்கிடையில், புழல் சிறையில் அமைச்சருக்கு 1440 என்ற கைதி எண் வழங்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் கோரிக்கையின் பேரில், அரசு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது வரை அங்கு சிகிச்சையில் உள்ள அமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழு மிகக்தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை இன்று நடைபெற்றது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய இதற்கான அறுவை சிகிச்சை நடைமுறை சுமார் 5 மணி நேரம் நீடித்து 10 மணியளவில் நிறைவடைந்தது. அவர் தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முன்னதாக வரும் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிப்பார், அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.