கேரள செவிலியர் நிமிஷாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைப்பு: காரணம் என்ன?
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைக்கொடுக்காத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவர் அபுபக்கர் முஃப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது பங்குதாரரை கொலை செயததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை எழுந்தது.
என்ன நடந்தது?
கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியா 2008 முதல் ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். 2011ஆம் ஆண்டில் நிமிஷா கேரளாவுக்குத் திருப்பி டாமி தாமஸ் என்பவரை மணந்தார்.
பின்னர் கணவருடன் ஏமனுக்கு சென்ற நிமிஷா 2014ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் மகளை உள்நாட்டு போர் காரணமாக கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து அரசு மருத்துவமனையின் வேலையை விட்டுவிட்டு 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் தலால் அப்தோ மெஹ்தியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு சொந்த மருத்துவமனையை திறந்தார்.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு நிமிஷா பிரியா தலால் அப்தோ மெஹ்தியை மயக்கமடைய வைத்து கொலை செய்ததாக புகார் எழுந்தது. மற்றொரு செவிலியரின் உதவியுடன் மெஹ்தியின் உடலை துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பைகளில் போட்டு தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர்.
இதுகுறித்த உண்மை வெளிவந்த பிறகு நிமிஷா குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏமனில் உள்ள சனாவின் விசாரணை நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
நிமிஷா தரப்பு நியாயம்:
இதை எதிர்த்து நிமிஷா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது. ஏமன் ஜனாதிபதியிடம் நிமிஷா முறையிட்டும் அவர் கருணை காட்ட மறுத்துவிட்டார். நிமிஷா பிரியாவுக்காக அனைத்து சட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
நிமிஷாவை மெஹ்தி ஏமாற்றியதாகவும் அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டதோடு அல்லாமல் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா மயக்க மருந்து கொடுத்ததாகவும் அது ஓவர் டோஸ் ஆகி இறந்ததாக நிமிஷா தரப்பில் கூறப்படுகிறது.
தண்டனை நிறுத்தி வைப்பு:
இந்நிலையில், நிமிஷாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைக்கொடுக்காத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவர் அபுபக்கர் முஃப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.





















