நாளை முதல் இனிமே இப்படிதான்...திருச்சி பேருந்து வழித்தடம் மாற்றம்: புதிய ரூட் மேப் இதோ
Trichy Panjapur Bus Stand: அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு உள்ளே வரும்போது காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.

திருச்சி: நாளை 16ம் தேதி முதல் திருச்சி மாநகரில் பேருந்துகள் இப்படிதான் செல்ல வேண்டும் என்று இயக்கப்படும் வழித்தடம் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பஞ்சப்பூரில் கடந்த மே.9ம் தேதி திறந்து வைத்த முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதை தொடா்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் கலைஞா் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு நாளை 16ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் கலைஞா் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு நாளை 16ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
விரைவு பேருந்துகள் புறநகரப் பேருந்துகள்: சென்னை, திருப்பதி, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சோி மார்க்கம் வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, காரைக்கால் மார்க்கம்: இந்த வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
நாமக்கல், சேலம், பெங்களுரு மார்க்கம்: இந்த வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம் மார்க்கம்: இந்த பகுதிகளிலிருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். அங்கிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மார்க்கம்: இந்த வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, கோர்ட், கலெக்டர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
மணப்பாறை, திண்டுக்கல், பழனி,குமுளி மார்க்கம்: இந்த பகுதிகளிலிருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை மீண்டும் இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
மதுரை,தூத்துக்குடி, விருதுநகர்,திருநெல்வேலி மார்க்கம்: வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
நகரப் பேருந்துகள்: மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.
ஆம்னிபேருந்துகள்: மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
அனைத்து பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு உள்ளே வரும்போது காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (யூ டர்ன்) செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















