Tasmac Sale: தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம் , ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
Tasmac liquor Sale: தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த 16ம் தேதி ஒரேநாளில் 290 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
Tasmac liquor Sale: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு ஏப்.17 தொடங்கி ஏப்.19ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
ரூ.290 கோடிக்கு மது விற்பனை:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இனி வரும் சனிக்கிழமை அன்று தான் திறக்கப்பட உள்ளது. தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு கடந்த 16ம் தேதியன்று, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நண்பகலில் கடையை திறந்தது தொடங்கி, இரவு மூடும் வரை விற்பன விறுவிறுப்பாக நடைபெற்றது. அடுத்தடுத்து விடுமுறையை கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று நாட்களுக்கான மதுபானங்களையும் பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். இதன் மூலம் அன்றைய ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும், 289 கோடியே 29 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வழக்கமான நாட்களில் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் வியாபாரத்தை விட இரு மடங்காகும்.
மண்டல வாரியாக மதுவிற்பனை:
மண்டல வாரியாக மதுபான விற்பன தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ஒரே நாளில் 68 கோடியே 35 லட்சத்திற்கு மது விற்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, திருச்சி மண்டலத்தில் 58 கோடியே 65 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் 57 கோடியே 30 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் 55 கோடியே 87 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் 49 கோடியே 10 லட்சத்திற்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. இதன தொடர்ந்து நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும், வரும் ஜுன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு:
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான, அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழகர் கட்சி என தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுபோக, விளவங்கோடு சட்டமன்ற தேர்தலுக்கான இடைதேர்தல் வாக்குப்பதிவும் நாளை நடைபெற உள்ளது.
தேர்தலை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான அளவிலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் போன்ற இயந்திரங்கள், இன்று மாலையே முறையான பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளை சென்றடையும். அதைதொடர்ந்து நாளை காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள்து. முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.