Diwali 2024: போட்றா வெடிய! இன்று தீபாவளி கொண்டாட்டம்! புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகம்!
தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் காலை முதல் பொதுமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
களைகட்டிய தீபாவளி:
தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆகும். இதையடுத்து, பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விழாக்காலங்களுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம் ஆகும்.
ஊருக்குச் சென்ற லட்சக்கணக்கான மக்கள்:
தீபாவளி காரணமாக தமிழ்நாட்டின் பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சுமார் 14 ஆயிரம் பேருந்துகளை இயக்கியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக பயணிகள் கூட்டம் அலைமோதி வந்தது. பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் தீபாவளிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது.
புத்தாடைகள், பட்டாசு விற்பனை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை என பெருநகரங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாடைகள் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கோடியில் புத்தாடைகளின் விற்பனை நடைபெற்றுள்ளது.
தீபாவளி என்றால் பட்டாசுகள் இல்லாமல் நிறைவடையாது என்பதால் பட்டாசுகளின் விற்பனையும் சிறப்பாகவே நடைபெற்றது. ஆனால், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்றது என்றே குறிப்பிட வேண்டும். பட்டாசுகள் தயாரிப்பிற்கான கட்டுப்பாடு, இணையவழி பட்டாசு விற்பனை உள்ளிட்ட பல காரணங்களால் விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது. சென்னைத் தீவுத்திடலிலும் பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்றதாகவே கூறப்படுகிறது. நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ததாலும் விற்பனை மந்தம் அடைந்தது.
ஜோராக நடந்த ஆடு, கோழி விற்பனை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் அசைவம் சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக, தமிழ்நாட்டின் முக்கியமான ஆடு, கோழி மற்றும் மாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றது. ஆடுகளின் விற்பனை படுஜோராகவே கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
வீடுகளில் இன்று சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் காலை முதலே வாழை இலை, மஞ்சள், பழங்கள், தேங்காய் ஆகியவற்றின் விற்பனை காய்கறி சந்தைகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் வழக்கத்தை விட அதிகளவில் காய்கறிகள் வரத்து உள்ளது.
பொதுமக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மருத்துவமனைகளிலும் மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.