Watch Video: பங்க்கர் பஸ்டர் எப்படி வேலை செய்யும்? சர்ச்சைகளுக்கு நடுவே வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்டதா இல்லையா என்ற சர்ச்சைகளுக்கு நடுவே, பங்க்கர் பஸ்டர் குண்டு எப்படி வேலை செய்யும் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளது அமெரிக்க ராணுவம்.

ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் பேசிய ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி மையங்களை அழித்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், ஈரான் அதை மறுத்துவந்த நிலையில், நேற்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சேதத்தை ஒப்புக்கொண்டார். ஆனால், மீண்டும் ஈரான் தலைவர் அந்த கூற்றை மறுத்துள்ளார். இப்படி சர்ச்சைகள் உலா வரும் நிலையில், பங்க்கர் பஸ்டர் குண்டு எப்படி வேலை செய்யும் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது அமெரிக்க ராணுவம்.
“பங்க்கர் பஸ்டர் குண்டுகள் எப்படி வேலை செய்யும்.?“
நேற்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க பாதுபாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க ராணுவ கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் டேன் கெய்ன் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள், அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கி அழித்த நிகழ்வின் திட்டமிடல் முதல் அதை செய்து முடித்தது வரையிலான செயல்முறைகள் குறித்து விளக்கமான எடுத்துரைத்தனர். அப்போது, ஜெனரல் கெய்ன், பங்க்கர் பஸ்டர் குண்டுகள் சோதனையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார். இதை, வெள்ளை மாளிகை அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Pentagon releases test footage showing how bunker-busters work.@SecDef Hegseth: “Because of the hatred of this press... your people are trying to leak & spin that it wasn't successful. It's irresponsible.” Gen. “Razin” Caine, on the mission: “I have chills..talking about this.” pic.twitter.com/nS1q6ml7Ae
— The White House (@WhiteHouse) June 26, 2025
இந்த நிகழ்வின்போது, ஊடகங்கள் வெறுப்புடன் இருப்பதால், ஈரான் மீதான தாக்குதல் தோல்வியடைந்ததாக செய்திகளை பரப்புகிறீர்கள், அவ்வாறு செய்வது பொறுப்பற்ற செயல் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய, ராணுவ தலைவர் ஜெனரல் கெய்ன், ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது எப்படி தாக்குதல் நடந்தது என்பதன் மாதிரிதான் அந்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார். பங்க்கர் பஸ்டர் குண்டுகள் மற்ற குண்டுகளைப் போல் அல்ல எனவும், இந்த குண்டுகள் ஏற்படுத்தும் சேதங்களை தரை மட்டத்தில் காண முடியாது என்றும், அவை, பூமியை துளைத்துக்கொண்டு சென்று பின்னர் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கிக் கூறினார்.
மேலும், ஈரானின் அணுசக்தி மையங்களை சரியாக குறி வைத்து இதேபோன்ற 6 குண்டுகள் ஏவப்பட்டதாகவும் கெய்ன் தெரிவித்தார்.
இதனிடையே பேசிய ஹெக்செத், ஈரான் மீதான தாக்குலின் வெற்றி குறித்து ஊடகங்கள் சந்தேகக் கேள்வி எழுப்புவதாகவும், அவர்கள் ட்ரம்ப்பிற்காக ஆரவாரம் செய்ய மாட்டார்கள் என்றும் கூறி கண்டனம் தெரிவித்தார்.





















