Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு வெளியாகிறது அசத்தல் அறிவிப்பு; செப்டம்பரில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம்!
அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், செப்டம்பர் மாதத்திற்குள் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் பணியாற்றும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது. இதனால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 20 ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது 309ஆவது தேர்தல் வாக்குறுதியில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தது. எனினும் ஆட்சி முடியப்போகும் நிலையில் இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாகவில்லை.
முன்னதாக பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் ஈட்டிய விடுப்பை மீண்டும் ஒப்படைத்து பணப்பலன் பெறுவது, திருமண நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
செப்டம்பர் மாதத்திற்குள் அறிவிப்பு
இதற்கிடையே அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், செப்டம்பர் மாதத்திற்குள் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என அறிவித்தார். இதுகுறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க ககன்தீப் சிங் பேடி தலைமையில், ஏற்கெனவே சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

பத்தாண்டுக்கு முன்பே அமைக்கப்பட்ட குழு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 10 ஆண்டுக்கு முன்பே தீவிரமடைந்த நிலையில் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2016ஆம் ஆண்டு குழு ஒன்றை முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார். அக்குழு எந்த பணியையும் செய்யாத நிலையில், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்னொரு குழுவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார். இப்போது 3ஆவது முறையாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
திட்டத்தை அமல்படுத்தாதது குறித்து தமிழக அரசுத் தரப்பில் கூறும்போது, ’’ஆட்சிப் பொறுப்பேற்ற சூழலில் கொரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி, முந்தைய அரசின் முறையற்ற நிதி நிர்வாகத்தால் மோசமான நிதிநிலை உள்ளிட்டவை காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தனர்.
எங்கெல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டம்
ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ, சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, திமுக அரசு நல்ல அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.






















