Amit Shah: அண்ணாவையும், பெரியாரையும் விமர்சித்தது பாஜக அல்ல - அமித்ஷா புது விளக்கம்
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்தது பாஜக அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் கடந்த 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்டது. அதில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பெரியார் - அண்ணா குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அண்ணாவையும், பெரியாரையும் விமர்சித்தது நாங்கள் அல்ல:
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் விமர்சிக்கப்பட்டுள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு பா.ஜ.க. நடத்திய நிகழ்ச்சி அல்ல. அது இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சி என்றார்.
தண்டனை:
மேலும், அமித்ஷாவிடம் திமுக-வை இந்து விரோத கட்சி என்று பா.ஜ.க. பரப்புரை செய்கிறதே? என்று கேள்வி எழுப்பபப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, யாரேனும் ஒரு சிந்தனையை எதிர்த்து பேசுகிறார்கள் என்றால், மக்கள் தானாகவே எதிர்வினையாற்றுகிறார்கள். எதையும் அரசியல் விவகாரமாக மாற்ற வேண்டியது இல்லை. நாம் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அவர்களது தவறுகளுக்கு உரிய தண்டனை அளிப்பார்கள்.
தமிழ்நாடு மக்கள், அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் எங்கள் இதயத்தில் வாழ்கின்றன. தமிழ்நாட்டின் மரபு மீது நாடு முழுவதும் பெருமை கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடி அரசின் கீழ் தமிழ் கலாச்சாரத்தை முன்னெடுத்த பல நடவடிக்கைகள் உள்ளன. 2023ம் ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடததில் வரலாற்று செங்கோலை நிறுவினார்.
இவ்வாறு அமித்ஷா பதிலளித்தார்.
இந்து விரோத கட்சியா திமுக?
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திராவிட கொள்கைகளை பிரதானமாக கொண்ட திமுக-வை தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக தற்போது அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. அதிமுக-வுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் திமுக-வை இந்துக்களுக்கு எதிராக தாெடர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக திமுக அரசு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட கோயில் திருப்பணிகள் ஆகியவற்றையும் அவ்வப்போது பட்டியலிட்டு வருகின்றனர். திமுக அரசு சார்பில் பழனியில் கடந்தாண்டு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது.
முருகப்பெருமானை சுற்றி அரசியல்:
தமிழக அரசியலில் தற்போது தமிழ்க்கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானை மையப்படுத்தி பல்வேறு அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் ராமர் கோயில் விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை அரசியலில் ஏற்படுத்தியது போல, தமிழ்நாட்டிலும் முருகப்பெருமான் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிலர் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சிக்கந்தர் மலை விவகாரத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட மோதல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.




















