Amit Shah: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசம்... திமுக-வின் ஊழல் பட்டியல் நீளமானது - அமித்ஷா அடுக்கிய லிஸ்டை பாருங்க
Amit Shah: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், திமுக-வின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

Amit Shah: திமுக அரசை பா.ஜ.க.வும், பா.ஜ.க.வை திமுக அரசும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வார்த்தை மோதலும், ஒரு கட்சி மீது மற்றொரு கட்சியினர் வைக்கும் விமர்சனமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
போதைப்பொருள், மதுபானம், மணல் மாஃபியா கொள்ளை உச்சம்:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போதைப்பொருள் மட்டுமின்றி மதுபானம் மற்றும் மணல் மாஃபியா கொள்ளை உச்சத்தில் உள்ளது. ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பிற்குள் வருகிறது. தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவைப் பொறுத்தவரை, போதைப்பொருள் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய முயற்சிக்கிறோம்.
இளைஞர்களின் எதிர்காலத்தை போதைப்பொருட்கள் பாழாக்குகின்றன. இதனால், போதைப்பொருட்களை அழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம். போதைப்பொருட்களுக்கு எதிரான அமைப்புகளையும் வலுப்படுத்தி உள்ளோம். மக்களிடம் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடைபெறுகிறது. 2004 -14ம் ஆண்டில் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான 25 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2014-2025 காலகட்டத்தில் பா.ஜ.க. அரசு ரூபாய் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான 1 கோடி கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
சட்டம் ஒழுங்கு மோசம்:
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை பற்றி இனியும் மறைத்து வைக்க ஒன்றும் இல்லை. ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்குச் செல்லும்போது, அதன் விளைவுகளை அதிகம் எதிர்கொள்வது பெண்களும், விளிம்பு நிலை மக்களுமே ஆவார்கள்.
தேசிய குற்றவாரிய ஆணவங்களின்படி, பார்த்தால் பட்டியலின மக்களுக்கு எதிராக 40 சதவீத குற்றங்கள் அதிகரித்துள்ளது. பட்டியலின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 21 சதவீதம் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பட்டியலின பிரதிநிதிகள் பங்கேற்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் அந்த விவகாரத்தில் தலையிட வேண்டியிருந்தது. பட்டியலின தலைவர்கள் உட்காருவதற்கு நாற்காலிகள் மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தரையில் அமர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஊழல் பட்டியல் நீளம்:
திமுக-வின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது. ரூபாய் 39 ஆயிரத்து 775 கோடி ரூபாய் மதுபான ஊழல், ரூபாய் 5 ஆயிரத்து 800 கோடி மணல் ஊழல், ரூபாய் 3 ஆயிரம் கோடியில் எல்காட் ஊழல், ரூபாய் 4 ஆயிரத்து 400 கோடியில் எரிசக்தி ஊழல், ரூபாய் 3 ஆயிரம் கோடியில் போக்குவரத்து துறையில் ஊழல் என ஊழல் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது.
வேலைக்காக பணம் வசூலிப்பவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் நடக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருவருக்கு ரூபாய் 41 ஆயிரத்து 503 ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. அப்படி என்றால் மொத்த தொகையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.





















