பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின் | MK Stalin on Duraimurugan | Udhayanidhi stalin | DMK
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை தூக்கிவிட்டு வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதால் துரைமுருகன் அப்செட்டில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. என்ன இருந்தாலும் துரைமுருகன் கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில் ஸ்டாலின் வேலூர் பயணத்தை திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.
திமுக தலைமை கழகத்தில் விரைவில் அதிரடியான மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை இறக்கிவிட்டு டி.ஆர்.பாலுவிடம் பொறுப்பை ஒப்படைக்க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. பொருளாளர் பதவியும் எ.வ.வேலு வசம் செல்லவிருப்பதாக சொல்கின்றனர். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவிலேயே இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரைமுருகன் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறையை பறித்து ரகுபதியிடம் ஒப்படைத்து அமைச்சரவையில் மாற்றம் செய்தார் ஸ்டாலின். ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு மாற்றப்பட்டது. கனிமவளத்துறை தொடர்பாக ஸ்டாலினுக்கு வந்த அடுக்கடுக்கான புகார்களால் தான் துறையை மாற்றியதாக தகவல் வெளியானது. இப்படி அடுத்தடுத்து பொறுப்புகள் பறிக்கப்படுவதால் அப்செட்டான துரைமுருகன் கட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் தவிர்த்து வந்தார். சீனியர் என்ற முறையில் பதவிகளை இழப்பதால் துரைமுருகனின் பவர் குறைந்துவிடும் என அவரது ஆதரவாளர்களும் புலம்பி வந்தனர்.
திமுகவின் மூத்த தலைவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும் துரைமுருகன் இருப்பதால் எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் அவர் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறாராம். அதனால் துரைமுருகனையும் சமாதானப்படுத்தி தலைமை கழகத்தில் சுமூகமாக மாற்றம் செய்ய ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் வரிசையில் அனுபவத்தில் கட்சியில் அடுத்தது நீங்கள் தான், வயது மூப்பு காரணமாக உங்களது உடல்நலனை கருத்தில் கொண்டு தான் பதவியை மாற்றும் முடிவை எடுத்ததாக ஸ்டாலின் சமரசம் பேசி வருவதாக சொல்கின்றனர். கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த துரைமுருகன், நேற்று மதிமுகவில் இருந்து முத்துரத்தினம் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்த போது அந்த நிகழ்வில் உடனிருந்தார்.
இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக ஸ்டாலின் வேலூர் சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. கட்சியில் துரைமுருகனின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையிலும் வேலூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஸ்டாலின், துரைமுருகனை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.





















