(Source: ECI | ABP NEWS)
Air India Black Box: ஏர் இந்தியா விமான கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்பு; விரைவில் வெளியாகும் உண்மை
அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளாகி 270 பேர் பலியானார்கள். இந்நிலையில், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கருப்புப் பெரியிலிருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கருப்புப் பெட்டியிலிருந்து டவுன்லோடு செய்யப்பட்ட தரவுகள்
கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலைய வளாகத்திற்கு அருகே உள்ள மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து, வெடித்துச் சிதறியது.
இந்நிலையில், 13-ம் தேதி நிகழ்விடத்திலிருந்து விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள சிவிஆர் அதாவது காக்பிட் குரல் பதிவு மற்றும் எஃப்.டி.ஆர், அதாவது விமான தரவு பதிவு ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் தலைவர் தலையில், பல்வேறு குழுக்கள் இந்த விமான விபத்து குறித்து விசாரித்து வருகிறது.
வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட கருப்புப் பெட்டி
கடந்த 13-ம் தேதி, விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின்போது, விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கருப்புப் பெட்டியின் வெளிப்புற பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளதாகவும், தரவுகளை மீட்பதில் சிக்கல் இருப்பதால், தரவுகளை டவுன்லோடு செய்ய, அந்த கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நேற்று பேசிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், தரவுகள் விரைவில் மீட்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், இன்று தரவுகள் டவுன்லோடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்தது எப்படி.?
கடந்த 12-ம் தேதி, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விமான நிலைய வளாகத்திற்கு அருகே இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் வெடித்துச் சிதறிய நிலையில், தீயில் கருகி விமானத்தில் இருந்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விடுதியில் இருந்த மாணவர்கள் பலரும் உயிரிழந்தனர். மொத்தமாக 270 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், கருப்புப் பெட்டியின் தரவுகளை ஆய்வு செய்வதற்குள்ளாகவே, சமூக வலைதளங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.





















