AIADMK: அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு.. என்னதான் முடிவு? இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கு
கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சில தீர்மானங்களும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இப்படி இருதரப்பும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடினார். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அமைந்தது.
இந்த சூழலில் உச்சநீதிமன்றத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். ஆனால் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை. இதனையடுத்து பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்குள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மார்ச் 17 ஆம் தேதி வெளியானது. மார்ச் 19 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு கொடுத்திருந்தார். இதனால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவார் என நினைத்த நிலையில் அதிமுக தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இதனை மார்ச் 19 ஆம் தேதி விடுமுறை நாளில் அவசர வழக்காக நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார்.
இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என்றும், முடிவை அறிவிக்கக்கூடாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் ஏப்ரல் மாதம் விசாரிக்க வேண்டிய பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கை மார்ச் 22 ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்து, அதன்படி விசாரணையும் நடைபெற்றது. அப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், நிபந்தனைகளை நீக்கினால் தானும் போட்டியிட தயார் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அதேசமயம் வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை தடுக்கவே வழக்கு தொடரப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்க செய்ய அவகாசம் அளித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. தொடர்ந்து எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் தீர்ப்பை ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரமே எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.