IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தி்ல் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை அணி இன்று கட்டாயம் வெற்றி நெருக்கடியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் களமிறங்கியது. முதலில் பந்துவீசிய மும்பை அணி இன்று தாங்கள் ஒரு சாம்பியன் என்பதை பறைசாற்றும் விதமாக பந்துவீசினர்.
117 ரன்கள் டார்கெட்:
இளம் வீரர் அஸ்வனி குமாரின் அபாரமான பவுலிங்கால் கொல்கத்தா அணி மும்பைக்கு 117 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்காக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் அவுட்டாக அடுத்து ஜோடி சேர்ந்த ரிக்கெல்டன் - வில் ஜேக்ஸ் ஜோடி ஆட்டத்தை மும்பை வசம் கொண்டு வந்தது.
ரியான் ரிக்கெல்டன் அதிரடி காட்டினார். ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ரஸல், சுனில் நரைன் என மாறி, மாறி வீசியும் எந்த பலனும் அளிக்கவில்லை. ரிக்கெல்டன் பவுண்டரி, சிக்ஸர் என விளாச ரன்களை ஏற்றினார். இலக்கு மிகவும் எளிதாக இருந்ததால் மும்பை வெற்றி ஒன்றும் கடினமாகவில்லை.
மிரட்டிய ரிக்கெல்டன்:
சிறப்பாக ஆடிய ரிக்கெல்டன் அரைசதம் விளாசினார். இதன்பின்னர், வில் ஜேக்ஸ் 16 ரன்களில் அவுட்டானார். பின்னர், ஜோடி சேர்ந்த ரிக்கெல்டன் - சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக ஆடியது.
இதன்பின்பு, களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் விளாசி மும்பை வெற்றியை எளிதாக்கினார். இதனால், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. ரிக்கெல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மிரட்டல் கம்பேக்:
சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்த மும்பை அணி இந்த போட்டியில் மிரட்டலான வெற்றி மூலம் மற்ற அணிகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இளம் பந்துவீச்சாளர் அஸ்வனி இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினார்.

