IPL 2025 MI vs KKR: முரட்டு கம்பேக்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய மும்பை! 117 ரன்களை ஈசியா அடிக்குமா பாண்ட்யா படை?
IPL 2025 MI vs KKR: கொல்கத்தா அணியை தங்களது மிரட்டலான பந்துவீச்சால் அசத்திய மும்பை அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IPL 2025 MI vs KKR: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் மோதின. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை அணி இன்றைய போட்டியில் ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்கும் நோக்கில் களமிறங்கியது. கடந்த போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா வெற்றியைத் தொடரும் நோக்கில் களமிறங்கியது.
அடுத்தடுத்து விக்கெட்:
இந்த நிலையில், டாஸ் வென்று மும்பை கேப்டன் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முடிவுக்கு நல்ல பலன் கிட்டியது. கடந்த 2 போட்டிகளில் ஆடிய சத்யநாராயணாவிற்கு பதிலாக அஸ்வனி குமார் களமிறக்கப்பட்டார். ஆட்டம் தொடங்கியது முதலே மும்பை வீரர்கள் ஆதிக்கமே இருந்தது. சுனில் நரைனை போல்ட் ஸ்டம்புகள் பறக்க போல்டாக்க, டி காக்கை அடுத்த ஓவரில் தீபக் சாஹர் காலி செய்தார்.
2 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்த கொல்கத்தாவிற்காக ரஹானே - ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தஜர். இந்த ஜோடியை இளம் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் பிரித்தார். தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே கேப்டன் ரஹானேவை அவுட்டாக்கினார். அவர் 7 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதன்பின்னர், கொல்கத்தாவின் சரிவு தொடங்கியது.
பவுலிங்கில் மிரட்டிய அஸ்வனிகுமார்:
அஸ்வனி குமார், பாண்ட்யா, சான்ட்னர், போல்ட் என மாறி, மாறி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, இளம்வீரர் அஸ்வனி குமார் கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தார். வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னில் அவுட்டாக, ரகுவன்ஷியை கேப்டன் பாண்ட்யா 26 ரன்னில் காலி செய்தார். அதன்பின்பு, கொல்கத்தாவின் விக்கெட் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தது. ரிங்கு சிங் - மணிஷ் பாண்டே ஜோடி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தனர்.
45 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தாவிற்காக இந்த ஜோடி சிறப்பாக ஆட முயற்சித்தது. மணீஷ் பாண்டே பவுண்டரியும், சிக்ஸரும் விளாச ரிங்குசிங்கும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். ஆனால், அஸ்வனி குமார் பந்தில் ரிங்கு சிங் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில், மணிஷ் பாண்டே 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசிய நிலையில் 19 ரன்களில் போல்டானார்.
தட்டுத்தடுமாறிய 100 ரன்கள்:
80 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கொல்கத்தாவின் நம்பிக்கையான ரஸல் சான்ட்னர் சுழலில் எல்பிடபுள்யூ ஆன நிலையில், மூன்றாவது நடுவர் முடிவால் தப்பினார். ஆனால், அவரையும் அஸ்வனி குமார் போல்டாக்கினார். ராமன்தீப்சிங் கொல்கத்தாவிற்காக போராட முயற்சித்தாலும் அவருக்கு மறுமுனையில் ஒத்துழைக்க யாரும் இல்லாமல் இருந்தது. தட்டுத்தடுமாறிய கொல்கத்தா அணி 15வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.
அந்த அணிக்காக ராமன்தீப் தனி ஆளாக அதிரடி காட்டத் தொடங்கினார். ஆனால் அவரை சான்ட்னர் தனது சுழலால் காலி செய்தார். இதனால், கொல்கத்தா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை அணிக்காக களமிறங்கிய அஸ்வனி குமார் 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டையும், பாண்ட்யா, போல்ட், விக்னேஷ் புத்தூர், சான்ட்னர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.




















