Sunrisers Hyderabad: தனக்கு தானே சங்கு ஊதும் சன்ரைசர்ஸ்! அடிச்சா சிக்ஸர் மட்டும்தானா?
IPL 2025 SRH: களமிறங்குவது முதலே ரன் அடிப்பதை மட்டுமே இலக்காக கொண்டு ஆடும் சன்ரைசர்ஸ் அணிக்கு அந்த நோக்கமே தற்போது எதிராக திரும்பியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணி என்று கருதப்படும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத். இந்த அணியின் மிகப்பெரிய பலமாக கருதப்படுவது பேட்டிங். கடந்த சீசனில் ஹைதரபாத் அணி பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் குவித்தது.
அடிப்பது மட்டுமே கிரிக்கெட்டா?
நடப்பு சீசனிலும் முதல் போட்டியிலே 286 ரன்களை குவித்த அடுத்து ஆடிய 2 போட்டிகளிலும் அதேபோல ரன்களை குவிக்க முயற்சித்து தோல்வியையே சந்தித்தனர். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, அனிகெத் வர்மா, கிளாசென், அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் என நடப்பு தொடரிலே மிகப்பெரிய பேட்டிங் பட்டாளம் கொண்ட அணியாக ஹைதரபாத் களமிறங்கியுள்ளது.
மிகப்பெரிய பேட்டிங் பலம் கொண்ட அணியாக இருந்தாலும் ஒரு போட்டியில் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு விளாச முயற்சிக்கின்றனர். போட்டியின் சூழலுக்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடி ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதே ஆரோக்கியமானது ஆகும். ஆனால், சன்ரைசர்ஸ் அணி சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே இலக்காக கொண்டு விளையாடுவது போல ஆடி வருகின்றனர்.
படுமோசமான பவுலிங்:
மேலும் அவர்களது பந்துவீச்சு ஒன்றும் அந்தளவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் போட்டியில் 286 ரன்களை குவித்து அனைவரையும் அசர வைத்தாலும் ராஜஸ்தான் அணியினருக்கு 242 ரன்களை விட்டுக்கொடுத்தனர். அந்த பலவீனமான பந்துவீச்சே லக்னோ மற்றும் டெல்லி அணியிடம் சன்ரைசர்ஸ் அணியை தோல்வியை தழுவச் செய்தது.
குறிப்பாக, லக்னோ அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை அவர்கள் வெறும் 16 ஓவர்களில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றனர். முகமது ஷமி, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங், உனத்கட், ஆடம் ஜம்பா, ராகுல் சாஹர் என பந்துவீச்சாளர்கள் இருந்தும் சிறப்பான பந்துவீச்சை யாருமே தாெடர்ந்து வெளிப்படுத்த இயலாத சூழல் உள்ளது. இதுவும் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
சரி செய்வார்களா?
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும் சூழலில் பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால், சன்ரைசர்ஸ் அணியினர் பார்ட்னர்ஷிப் அமைப்பது பற்றி யோசிக்காமல் சகட்டுமேனிக்கு பந்துகளை விளாசுவதற்கே முயற்சிக்கின்றனர். இந்த பந்துகள் விக்கெட்டுகளை சில நேரம் பெற்றுத் தந்தாலும் பல நேரங்களில் எதிரணிக்கு விக்கெட்டுகளை தாரை வார்த்து விடுகிறது. பயிற்சியாளர்களான வெட்டோரி, முத்தையா முரளிதரன் இதை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
இன்னும் இந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு 11 போட்டிகள் இருப்பதால் அவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்தால் பழைய பலத்துடன் கம்பேக் தரலாம்.



















