கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
US Signal Chat Leak: ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது எப்படி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா ரகசியாமாக திட்டமிட்ட தகவலானது, பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவானது, சிக்னல் செயலியின் வாயிலாக, ஏமனில் உள்ள ஹூதி அமைப்பின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக பரிமாறிக் கொண்ட தகவலானது, வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்காவின் பாதுகாப்பின் குறைபாடு என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், சிக்னல் செயலியில் என்ன பேசினார்கள், எப்படி கசிந்தது என்பது குறித்து பார்ப்போம்.
சிக்னல் செயலி:
உலகளவில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்காக பல செயலிகள் இருக்கின்றன. குறிப்பாக வாட்சப், டெலிகிராம், வீ சாட், மெஸஞ்சர், சிக்னல் உள்ளிட்ட பல சேட் செயலிகள் இருக்கின்றன. இந்த செயலிகள் மூலமாக குழுவை உருவாக்கியும், தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் வந்துவிட்டன. இந்நிலையில், செயலிகளின் வழியாக பரிமாறப்படும் தகவலை, இடையில் யாரேனும் பார்க்க கூடாது வகையில் என்கிரிப்ட் வசதியும் வந்துவிட்டது. அதாவது , நாம் அனுப்பப்படும் தகவலானது சென்றடையும் நபர்களை தவிர யாருக்கும் தெரியாது. வேறு யாரேனும் பார்க்க நினைத்தால் கூட 0 அல்லது 1 என்று பைனரியாகத்தான் தெரியும். இவ்வாறு பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்ட காரணத்தால், பலரும் ரகசிய தகவல்களை, தற்போது தனியார் நிறுவனங்களின் செயலிகளின் வழியாக அனுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்த தருணத்தில் சிக்னல் செயலியானது, பாதுகாப்பு அம்சத்தில் மிகவும் வலுவானது எனவும் கூறப்படுகிறது. இந்த சிக்னல் செயலியை பயன்படுத்த வேண்டும் என்றால், குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும். சரி பிரச்னை என்னவென்று பார்ப்போம்.
Also Read: Solar Eclipse: பகலை இருளாக்கும் நிலவு! இன்று வருடத்தின் முதல் சூரிய கிரகணம்!
ஹூத்தி பிசி குரூப்:
கடந்த மார்ச் 11 ஆம் தேதி, அமெரிக்காவில் உயர் அதிகாரிகளான துணை அதிபர் ஜே.டி வேன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மை வால்ட்ஸ், சிஐஏ அமைப்பின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேர் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் ஆரம்பித்த குரூப்பிற்கு ஹூத்தி பிசி குருப் என பெயர் வைத்திருக்கின்றனர். இந்த குருப்பில், சேர்க்கப்பட்டவர்களில் அமெரிக்காவின் அட்லாண்டிக் பத்திரிகை ஆசிரியர் ஜெஃப்ரிக் கோல்ட்ஸ்பெர்க் ஒருவரும் இருந்திருக்கிறார். ஆனால், இவரை பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், தெரியாமல் குருப்பில் சேர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுதான், தகவல் வெளியாகிய பிரச்னைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

குரூப்பில் பேசியது என்ன?
இந்த குரூப்பில் ஏமன் நாட்டில் ஹூதி குழு மீது, விமான தாக்குதல் நடத்துவது குறித்து பேசியிருக்கின்றனர். அந்த குரூப்பில் துணை அதிபர் ஜே.டி வான்ஸ் தெரிவித்ததாவது, “ நாம் ஏன் தேவையில்லாமல், நமது பணத்தை செலவழித்து ஐரோப்பியாவிற்காக தாக்குதல் நடத்த வேண்டும், நமது கப்பலைவுட ஐரோப்பாவின் கப்பலதால்தான் அதிகம் செல்கிறது என்று குறிப்பிட்ட பதிவுகள் வெளியாகியிருக்கிறது. ஹூதி குழுவினர், நமது கப்பல் மீது தாக்குதல் நடத்துகின்றனர், இதனால் தாக்குதல் உடனே நடத்த வேண்டும் என பிற அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதை தொடர்ந்து, எந்த போர் விமானத்தை அனுப்ப வேண்டும், எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற தகவலும் பரிமாறப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மார்ச் 15 ஆம் தேதி ஏமனில் உள்ள ஹூதி அமைப்பினர் மீது தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டது என்றும் நமது வீரர்களுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவிக்கும் பதிவுகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரகசிய தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்:
இப்போதுதான், அந்த குரூப்பில் இருந்த பத்திரிகையாளர் ஜெஃப்ரிக்கிற்கு புரிகிறது. இது, மிகவும் தீவிரமான விசயம். இந்த குரூப் போலியானது இல்லை. இதில் பேசியதுதான் நடந்திருக்கிறது என அதிர்ச்சியடைகிறார். இது குறித்து அமெரிக்காவின் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு, ராணுவ ரகிசியங்கள் குறித்து எல்லாம் குரூப் சேட்டில் பரிமாறக் கொள்ளவில்லை என்றும், ஆனாலும் இந்த தகவலை வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, கடந்த திங்கள் கிழமை ( மார்ச் 25 ) சில முக்கிய தகவலை மறைத்து, பிற தகவலை அட்லாண்டிக் பத்திரிகையில் வெளியிட்டு விட்டார். இதையடுத்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

படம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் (வலது), தி அட்லாண்டிக் பத்திரிகையாளர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்கை ( இடது ) சிக்னல் ஆப் குழுவில் தவறாக சேர்த்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க செனட் சபை உளவு அதிகாரிகளை அழைத்து, மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய தகவல் எப்படி வெளியானது என கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர்கள் தரப்பில் முக்கியமான தகவல் எல்லாம் பேசவில்லை என்றும் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இந்த பத்திரிகையாளர் ஒரு டிரம்ப் எதிர்ப்பாளர், தேவையில்லாமல் பேசுகிறார் என்றும் அமெரிக்க அதிகாரிகள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
டிரம்ப் சொன்னது என்ன?

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில் “ இது எல்லாம் பெரிய விசயமே இல்லை. நான்,எங்களது அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற சர்வசாதரணமாக , தகவல் கசிந்தது குறித்து தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அரசு அதிகாரிகளுக்கு தனிப்பட்ட மொபைல் இருக்கும் போது, சொந்த போன்கள் மூலம், தனியார் செயலியான சிக்னல் மூலம் தகவலை பரிமாறிக் கொண்டது ஏன் என்றும் அமெரிக்க பாதுகாப்பு விசயத்தில் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறீர்கள் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், இந்த உளவுத் தகவலை, எதிர் தரப்பினர் தெரிந்து கொண்டு நம் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியிருந்தால், பெரும் பாதிப்பை சந்திக்க நேரிட்டிருக்கும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் டிரம்ப் நிர்வாகத்தினருக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.
உலகளவில் பரபரப்பு:
இதையடுத்து, அந்த குருப்பில் இருந்து அனைவரும் வெளியேறி விட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இனிமேல் ரகசிய தகவல்களை சொந்த மொபைல்களிலோ அல்லது தனியார் செயலிகளின் வாயிலாக பரிமாறிக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருக்கும் அமெரிக்க நாட்டின், ரகசிய காக்கப்பட வேண்டிய ராணுவ தகவலானது கசிந்து இருப்பதாக கூறப்படுவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.






















