அவங்கள நிறுத்தச் சொல்லுங்க..! ஐபிஎல் தமிழ் வர்ணனையாளர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
IPL 2025 Tamil Commentary: ஐபிஎல் தொடரில் தமிழ் வர்ணனையாளர்களின் வர்ணனைக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய மக்கள் தொகையில் 90 சதவீதம் மக்கள் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர். சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்தியாவில், ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ஐபிஎல் தமிழ் வர்ணனை:
ஐபிஎல் தொடரை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்காக கிரிக்கெட் வர்ணனைகள் ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி ஒவ்வொரு அணியின் பிரதான மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழியிலும் ஐபிஎல் தொடர் வர்ணனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் கிரிக்கெட் வர்ணனை தொடங்கப்பட்டதன் நோக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டை ரசிப்பதற்கும், கிரிக்கெட்டில் தெரியாத விதிகள், பெயர்கள் உள்ளிட்ட பலவற்றை அறிந்து கொள்வதற்காகவுமே ஆகும். ஆனால், அதன் நோக்கம் நிறைவேறியதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் வர்ணனையாளர்கள் கிரிக்கெட் போட்டிகளின்போது கிரிக்கெட்டைத் தவிர மற்ற விஷயங்கள் குறித்தே அதிகம் பேசுகின்றனர்.
வெறுப்பின் உச்சியில் ரசிகர்கள்:
மேலும், ஒரு அணியை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், ஒரு அணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் எதிரணிகளை ஏளனமாக பேசுவதும், குறிப்பிட்ட அணியை மட்டும் உயர்த்தி பேசுவதையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் வர்ணனையாளர்களாக உள்ள பத்ரிநாத், முத்து, யோமகேஷ் உள்ளிட்ட பலரும் இதையே தொடர்ந்து செய்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முகஸ்துதி:
5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் இவர்கள் தரும் வர்ணனைகளே பலருக்கும் சென்னை அணி மீது வெறுப்பை உண்டாக்கி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் மோதலுக்கு பெருவாரியான காரணமாக இந்த வர்ணனையே உள்ளது. கள யதார்த்தத்தை தவிர்தது முகஸ்துதி பாடுவதையே தமிழ் வர்ணனையாளர்கள் பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் நேற்று சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக ஆடிய ப போட்டியில் ராகுல் திரிபாதியின் உடல்மொழியை தமிழ் வர்ணனையாளர்கள் நடித்துக் காட்டியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இவர்களது பேச்சிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகி்ன்றனர். தமிழ் வர்ணனையாளர்களை மாற்றுங்கள், கிரிக்கெட் அறிவுள்ளவர்களை நியமியுங்கள் என்றும் நடுநிலையான வர்ணனையாளராக செயல்பட கூறுங்கள் என்றும் தொடர்ந்து ரசிகர்கள் இவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
வறுத்தெடுக்கும் ரசிகர்கள்:
இன்னும் சில ரசிகர்கள் தகாத வார்த்தையாலும் இவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் வீரர் பத்ரிநாத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். அவர் ஆர்சிபி அணியை குறைத்து மதிப்பிட்டு பேசுவது உள்ளிட்ட பல விவகாரங்களால் அவரைத் தொடர்ந்து மிக மோசமான வார்த்தைகளால் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஒருமையில் மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். அவரது வயதுடன் ஒப்பிடும்போது மற்ற வீரர்கள் வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் பொதுவெளியில் வீரர்களை ஒருமையில் பேசுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இனியாவது மாறுவார்களா?
இதுதவிர இந்தியாவிற்காக டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று தந்த தோனி மீது அதீத எதிர்ப்பும், வன்மமும் உருவானதற்கு தமிழ் வர்ணனையாளர்கள் மிக முக்கிய காரணமாக மாறியுள்ளனர். தோனியின் புகழ் பாடுகின்றேன் என்ற பெயரில் இவர்கள் தோனியின் முகஸ்துதி பேசியே இவர்கள் பலரின் வெறுப்பை பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட ஸ்ரீகாந்த், பத்ரிநாத், சடகோபன் ரமேஷ், யோமகேஷ், அனிருதா ஸ்ரீகாந்த் இனி வரும் நாட்களில் வர்ணனையை நடுநிலையாக செய்யாவிட்டால் ரசிகர்கள் வெறுப்பை மேலும் அதிகளவில் சம்பாதிக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்:
மற்ற மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. ஏனென்றால் தமிழ்நாட்டில் கிரிக்கெட் திறமையை மதிப்பார்கள். எதிரணி வீரர் என்றாலும் அவர் சிறப்பாக ஆடினால் எழுந்து நின்று கைதட்டுவார்கள்.
அப்படி கிரிக்கெட் அறிவு கொண்ட தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், சென்னை அணிக்காக ஆடும் ருதுராஜ், ஜடேஜா அவுட்டாகி தோனி களமிறங்குகிறார் என்று கைதட்டி ரசிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறார்கள். அந்தளவு அவர்கள் ஆரோக்கியமற்ற மனநிலைக்கு மாறியிருப்பதற்கு இந்த தமிழ் வர்ணனையும் முக்கிய காரணம் என்றே கிரிக்கெட் நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.