தந்தையின் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்த பிள்ளைகள்; ஒன்று சேர்ந்து ஊர் மக்கள் செய்த காரியம்..!
ஆரணி அருகே தந்தையின் இறுதி சடங்கை செய்யக்கூட பணம் இல்லாமல் தவித்த பிள்ளைகள். ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பணம் வசூல் செய்து இறுதி சடங்கு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜெயசீலன் வயது (46). இவருடைய மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு சக்திவேல் வயது (17), ரஞ்சித் வயது (15) , வரலட்சுமி வயது (11) என 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் 10 ஆண்டுகளாக தாயின்றி 3 பிள்ளைகளையும் தந்தை ஜெயசீலன் விவசாய கூலி வேலை செய்து வளர்த்து வந்தார். இவருடைய இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் படிக்க வைத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்துவந்தார். தற்பொழுது சக்திவேல் 12ம் வகுப்பும், ரஞ்சித் 10ம் வகுப்பும், வரலட்சுமி 7ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த ஜெயசீலன் நேற்று இரவு திடீர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த இரண்டு மகன் மற்றும் மகள் நிலைகுலைந்து நின்றனர். இதனைக் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள ராட்டிணமங்கலம் புதிய காலனி வாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் வசூல் செய்து இறுதி சடங்குகளை செய்தனர். தாயை இழந்து தந்தையின் அரவணைப்பால் 10 ஆண்டு காலம் வாழ்ந்து வந்த மகள் மற்றும் மகன்கள் தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்கு கூட பணம் இல்லாமல் பரிதாபமாக நின்றது ராட்டிணமங்கலம் கிராமத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியது.
இதுகுறித்து சக்தேவேலிடம் பேசுகையில்;
நாங்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள். எங்களுடைய அம்மா நாங்கள் குழந்தைகளாக உள்ளபோதே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்பாதான் எங்களை விவசாய கூலிவேலை செய்து வளர்த்து வந்தார். சில நாட்கள் அப்பாவிற்கு வேலையில்லாத நாட்கள் நாங்கள் அன்று முழுவதும் பட்டினிதான், தண்ணீர் குடித்துவிட்டு இரவு முழுவதும் கழித்து விடுவோம் பள்ளியில் வழங்கக்கூடிய மதிய சத்துணவு தான் எங்களுக்கு சாப்பாடு, எங்களுடைய பசியை அதைவைத்துதான் தீர்த்து கொள்வோம். அதேபோல் எங்களுடைய வீடு, ஓட்டு வீடு மழைகாலத்தில் வீடு முழுவதும் ஒழுகும், இரவு முழுவதும் எங்களுக்கு தூக்கம் கிடையாது. எங்களுடைய தந்தைதான் அப்போது தார்பாய் வைத்து எங்களை உறங்கவைப்பார். சில நாட்களில் எங்களுடைய தந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவரை நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பணமில்லை, திடீரென எங்களுடைய அப்பா உயிரிழந்து விட்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் நாங்கள் கதறி அழுதோம், அதனை பார்த்து பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வந்தனர். அப்பா உயிரிழந்ததை தெரிவித்தோம். அதற்கு அவர்கள் அப்பாவை அடக்கம் செய்ய பணம் உள்ளதா என்று கேட்டனர். நான் எதுவும் கூறவில்லை, எங்களிடம் பணம் இல்லாததை அறிந்த அவர்கள் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணத்தை சேர்த்து அப்பாவின் உடலை அடக்கம் செய்தனர். தற்போது நாங்கள் எந்தவித ஆதரவுமின்றி தவித்து வருகிறோம், எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தான் படிப்பதற்கும் உணவிற்கும் உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து ஊர் பொதுமக்களிடம் பேசுகையில்;
ஜெயசீலனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். ஜெயசீலன் விவசாய கூலிவேலைக்கு செல்வார். அவருக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் தான் வருமானம். அதைவைத்துதான் ஜெயசீலன் குடும்பத்தை நடத்திவந்தார். அந்த விவசாய கூலி வேலையும் சில நாட்கள் கிடைக்கும் சில நாட்கள் கிடைக்காது. மற்ற நாட்களில் அவர் வீட்டில் வேலையின்றி கிடப்பார். அவர்களுடைய வீட்டில் உணவு பஞ்சமும் இருக்கும். ஜெயசீலனின் மனைவி மகேஷ்வரி உடல்நலக் குறைவால் இறந்தார். மகேஷ்வரி இறக்கும் போது இவர்களுடைய மகன்கள் சிறுபிள்ளைகள் அவருடைய மகள் கைக்குழந்தை. ஜெயசீலன் எப்படி இவர்களை வைத்து காப்பாத்தபோகிறார் என்று எங்களுடைய கண்களில் கண்ணீர் கொட்டியது. பின்னர் சில வருடங்களும் ஓடியது சில மாதங்களுக்கு முன்பு ஜெயசீலனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது இவர்களுடைய குடும்பத்தில் உணவு பஞ்சமும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பணமின்றியும் தவித்து வந்தனர். ஜெயசீலனின் பிள்ளைகளும் கிடைக்கும் உணவை வைத்து பகிர்ந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர். திடீரென ஜெயசீலன் உடல்நலம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.
என்ன செய்வது அறியாமல் அவருடைய பிள்ளைகள் தவித்தனர். அப்போது அவருடைய இரண்டு மகன்கள் பள்ளியை முடித்து கூலிவேலைக்கு செல்வார்கள். இவர்களின் குடும்ப நிலை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். இந்நிலையில் தான் நேற்று ஜெயசீலன் உயிரிழந்தார். இவருடைய இரண்டு மகன்கள் மற்றும் மகள் என்ன செய்வது தெரியாமல் கதறி அழுதபடி வீட்டிலேயே இருந்தனர். அப்போது அவர்களிடம் சென்று உங்களுடைய தந்தையின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் பணம் உள்ளதா என்று கேட்டோம். அப்போது அழுதபடியே உடல் அடக்கம் செய்யவும் பணம் இல்லை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கதறி அழுத படியே கூறினர். இதனை அறிந்த நாங்கள், எங்கள் கிராம பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஜெயசீலனின் உடலை அடக்கம் செய்தோம். தற்போது இந்த பிள்ளைகள் ஆதரவு இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு தான் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்