Annamalai Delhi Visit: திடீர் ட்விஸ்டாக டெல்லி விரையும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை? அப்ப யாத்திரை?
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக நாளை டெல்லி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலையின் டெல்லி பயணத்திற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
அண்ணாமலை டெல்லி பயணம்:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவரான நட்டாவின் அழைப்பின் பேரில், அண்ணாமலை டெல்லிக்கு விரைவதாக கூறப்படுகிறது. என் மண் என் மக்கள் பெயரில் அண்ணாமலை ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கி, தமிழ்நாடு முழுவதுமான பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தனது பாதயாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு, அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
எதற்கு இந்த பயணம்?
அண்மையில் தென்னிந்தியாவில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், தமிழ்நட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தம்பிதுரை மற்றும் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், அண்ணாமலை டெல்லி புறப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி, அதிமுக உடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாஜக தலைமை அண்ணாமலையுடன் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதயாத்திரை:
தமிழ்நாட்டில் 5 பகுதியாக நடக்கும் இந்த நடைப்பயணத்தில் 234 தொகுதிகளுக்கு செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். 2024-ஆம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைபயணம், 168 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்படும். 1700 கிமீ தொலைவும், 234 தொகுதிகளையும் கால்நடையாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
எட்டாவது நாள் பயணம்:
ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கி புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் நடைபயணமாக கடந்து எட்டாவது நாளாக மதுரை மாவட்டத்திற்குள் அண்ணாமலை பயணம் மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து, மதுரையில் நாளை பாஜக சார்பில் சார்பில் பொதுகூட்டம் நடைபெற இருந்தது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள இருந்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பின் பேரில் டில்லிக்கு திடீரென பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலை தி.மு.க., நேர்மையாக உட்கட்சி தேர்தலை நடத்தினால் கனிமொழிதான் தி.மு.க தலைவராவார். தேர்தலில் தி.மு.க., தோற்றால் தலைமையில் மாற்றம் ஏற்படும். வாழ்வா சாவா தேர்தல் பா.ஜ.,வுக்கு இல்லை.திமுகவுக்கு தான். ராகுல் பார்லிக்கு வருவது நல்லது தான் அவர் பார்லிக்கு வந்து சேட்டை செய்தால் அது பா.ஜ.வுக்கு அதிக இடங்களை பெற்று தரும் . என கூறினார்.