GH Parking Fee Issue: அரசு மருத்துவமனை ஊழியர்களின் வாகனங்களுக்கு கட்டாய வசூல்... கொந்தளிக்கும் ஊழியர்கள்
இரு சக்கர வாகனத்திற்கு ரூ.15 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.15 கட்டணமாக செலுத்தி வாகனத்திற்கான அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், உள்நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் அரசு மருத்துவர்கள், செவியலியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், இதுவரையில் மருத்துவமனைக்கு வருகை புரியும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மருத்துவமனை சார்பாக எந்த கட்டணமும் வசூல் செய்யவில்லை.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை வாட்ஸ் ஆப் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.15 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.15 கட்டணமாக செலுத்தி வாகனத்திற்கான அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ சீல் வைத்து, கையெழுத்திட்டு அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூகுள் பே மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம்," என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனத்திற்கு எதற்காக அனுமதி சீட்டு? கட்டாய கட்டண வசூல் ஏன்? செலுத்தப்படும் கட்டணம் யாருக்கு செல்கிறது? என்று ஊழியர்கள் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை முதல்வர் தேவி மீனாளிடம் கேட்டபோது, "அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வாகன அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இதற்காக இருசக்கர வாகனத்திற்கு ரூ.15 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.15 கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்றுதான்" என்று கூறினார்.