Sudeep: நடிகர் சுதீப்பின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.. தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்..! என்ன காரணம்?
கிச்சா சுதீப்பின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், மே 13ம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
ஆட்சியை தக்க வைக்க போராடும் பாஜக:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வியூகம் அமைத்து செயல்பட்டு வரும் பாஜக, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
ரத்து செய்தது மட்டும் இன்றி, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான லிங்காயத் மற்றும் வொக்கலிகாவுக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இப்படி அதிரடியான நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.
தடை விதிக்க வேண்டும்:
அதன் ஒரு பகுதியாக, கன்னட சினிமா நடிகர் கிச்சா சுதீப்பை களத்தில் இறக்கியுள்ளது பாஜக. வரும் சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளதாக கிச்சா சுதீப் அறிவித்திருந்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடியும் வரை, கிச்சா சுதீப்பின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பா.ஜ.க.விற்கு ஆதரவாக சுதீப்:
இதுகுறித்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் அகமது பேசுகையில், "சுதீப், கர்நாடக முதலமைச்சருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி, முதலமைச்சர் என்ன சொன்னாலும் அதை கேட்கபோவதாக கூறியிருந்தார். அரசியல் கட்சியை பின்பற்ற போவதாக கூறியிருந்தார். எனவே, அவரையும் அரசியல்வாதியாகதான் கருத வேண்டும்" என்றார்.
முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் பாஜகவுக்கு தனது ஆதரவை தெரிவித்த கிச்சா சுதீப், "என்னுடைய ஆதரவை கர்நாடக முதலமைச்சர் பொம்மைக்கு வழங்குகிறேன்" என்றார்.
பின்னர் பேசிய பசவராஜ் பொம்மை, "சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. அவர் எனக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். அவர் எனக்கு அளித்த ஆதரவு என்பதை அவர் பாஜகவுக்கு அளித்த ஆதரவாக கருத வேண்டும்" என்றார்.
பாஜக கட்சியில் நடிகர் சுதீப் இணைய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவிய உடனேயே அவருக்கு மிரட்டல் கடிதங்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வந்துள்ளன. அந்த மிரட்டல் கடிதத்தில் 'தனிப்பட்ட வீடியோக்கள்' இணையத்தில் லீக் செய்யப்படும் என மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.