சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், அவரிடம் தீ ஆணைய தலைவர் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த சங்கர்ஜிவால் கடந்த 2023ம் ஆண்டு தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டு சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கமும், 2019ம் ஆண்டு குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் பெற்றவர் சங்கர் ஜிவால். அவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் இன்றுடன் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தது.
சங்கர் ஜிவாலுக்கு பிறகு அடுத்த டிஜிபி யார் என்ற விவாதமும் எழுந்தது. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் 8 அதிகாரிகளை தமிழக அரசு டிக் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடியும் நிலையில் அடுத்த டிஜிபியை பணியமர்த்தாமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சன வலையிலும் சிக்கியுள்ளது.
இந்தநிலையில் சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு ஒன்றை கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ங்கர் ஜிவால் ஓய்வுபெறுவதை விரும்பாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க ஆலோசனை நடத்தி வருவதாக ஏற்கனவே பேசப்பட்டது. முதலில் காவல்துறை ஆலோசகர் பதவியை கொடுக்கலாமா என பேச்சுவார்த்தை சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், சங்கர் ஜிவாலை தீ ஆணைய தலைவராக நியமித்துள்ளார் ஸ்டாலின். தீயணைப்பு துறையில் சீர்திருத்த பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசு, தீயணைப்பு துறை ஆணையத்தை உருவாக்கியுள்ளது. 2022ம் ஆண்டு தீ ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தீயணைப்பு துறையில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை கொண்டு வரவும் முடிவெடுத்த தமிழக அரசு, அதற்காக ஒரு ஆணையத்தை வைத்து அந்த பொறுப்பை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்துள்ளது.





















