100 முறை சங்கி கூப்பிடுங்க.. பொட்டு வைத்தாலும் பிரச்னை.. நடிகர் ரஞ்சித் ஓபன் டாக்
சங்கி என்று அழைத்தால் மார் தட்டி ஏற்பதாக பிரபல நடிகர் தெரிவித்திருக்கிறார்.

நேசம் புதிது, மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் ரஞ்சித். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிப்பை தாண்டி அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் ரஞ்சித் பாமகவில் இணைந்து களப்பணி செய்தார். அங்கு இளைஞர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். முறையான சொல்லப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அங்கிருந்து பாஜகவிற்கு தாவினார். தற்போது கொங்கு மண்டல பகுதியில் பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து வருகிறார். சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரித்து பேசுவதை வழக்கமாக வைத்திருப்பதால் சர்ச்சையிலும் சிக்கினார்.
மேலும், அரசியல் தலைவரை மோசமாக சித்தரித்தும் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படம் ரிலீஸ் ஆகாமல் தடுமாறினார். தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் முன்வரவில்லை என்றும் கண்ணீர் விட்டு அழுகாத குறையாக கதறினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ரஞ்சித் யார் என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது. அவரை பற்றிய தவறான எண்ணங்களும் மக்கள் மனதில் மாற்றத்தை தந்தது. இதைத்தொடர்ந்து சைலண்ட் மோடில் இருந்து வந்த ரஞ்சித் தற்போது சர்ச்சையாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித், 100 முறை என்னை சங்கி என்றே அழைக்கிறார்கள் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மார் தட்டி ஏற்றுக்கொள்வேன். நாம் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளோம். பொட்டு வைப்பதில் கூட பிரச்னை உள்ளது என அவர் பேசினார். இவரது பேச்சு சர்ச்சையாகியுள்ளது.





















