30% மானியத்தில் உழவர் நல சேவை மையம்...! வேளாண் பட்டதாரிகளுக்கு பொன்னான வாய்ப்பு; உடனே விண்ணப்பியுங்கள்!
விழுப்புரம் : 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்கலாம். வேளாண்மை படித்தவர்கள் முன்வர வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன்வர வேண்டுமென விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் நலன் காத்திடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநில அரசு திட்டத்தின்கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் என்னும் திட்டம் 2025-26ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய ப்படிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும் தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஆயிரம் எண்கள் உழவர் நல சேவை மையம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.10 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைத்திட 30% மானியமாக ரூ.3 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரை வழங்கப்படும். இதற்கென, மாநில நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியை பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைப்பொருட்களை மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனை ஆகியவை வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் முதல்வரின் உழவர் நல சேவை மையம், விழுப்புரம் மாவட்டத்திற்கு 17 எண்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. ரூ.10 இலட்சம் முதலீட்டில் அமைக்கப்படும் உழவர் நல சேவை மையத்திற்கு மானியமாக ரூ.3 இலட்சமும், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் சேவை மையத்திற்கு ரூ.6 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலதனம் மானியம் 30 சதவீதமாகும். அதிகபட்ச மானியம் ரூ.6 இலட்சம் ஆகும். வேளாண்மை உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் முதலமைச்சரின் உழவர் நல சேவை மைய பயனாளிகளுக்கும் வழங்கப்படும். பயனாளிகள் தங்களது விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதில், 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில், பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற https://www.tnagrisnet.tn.gov.in/ முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் மாநில அரசின் உதவியுடன் தொடங்கப்படுவதால் இந்த அரிய வாய்ப்பினை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.





















