சினிமாவில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த வேட்டையாடு விளையாடு பட நடிகை கமாலினி முகர்ஜி
கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து கவனமீர்த்த கமாலினி முகர்ஜி சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதல் முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார்

2000 களில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் கமாலினி முகர்ஜி. தமிழில் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின் 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படத்தில் நடித்தார். 2014 ஆம் ஆண்டு ராம் சரணின் 'கோவிந்துடு அந்தரிவடேலே' என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் அவர் தெலுங்கு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கான காரணத்தை சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் பகிர்ந்துகொண்டார் கமாலினி
தெலுங்கு சினிமாவில் இருந்து விலகியது ஏன்?
2014 ஆம் ஆண்டுக்குப் பின் தெலுங்கு சினிமாவில் நடிப்பதை கமாலினி தவிர்த்து வந்தார். இதற்கான காரணத்தை பற்றி கூறுகையில் அவர் இப்படி கூறினார் "ராம் சரண் படத்தில் நடித்த போது தான் நடித்த கதாபாத்திரம் சம்பந்தமே இல்லாததாய் தோன்றியது. அது என்னை ரொம்ப காயப்படுத்தியது. மற்றபடி அப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடன் நன்றாக பழகினார்கள். நான் யாருடனும் எந்த சண்டையும் போடவில்லை. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் உருவாகியிருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. சில சமயங்களில் சில கதாபாத்திரங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டதாக தோன்றும். அப்படி நினைத்து நடித்த காட்சிகள் நாம் நினைத்தது போல் வருவதில்லை. அது என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியது. இதனால் சில காலத்திற்கு தெலுங்கு படங்களை தவிர்த்து பிற மொழி படங்களில் நடிக்க முடிவு செய்தேன்" என கமாலினி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஃபிர் மிலேங்கே' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கமாலினி அதே வருடம் சேகர் கம்முலா இயக்கத்தில் ஆனந்த் படத்தை நடித்தார். தொடர்ந்து ஸ்டைல் , கோதாவரி , ஹேப்பி டேஸ் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.





















