Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister PeriyasamyED Raid: அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலம்.

Minister PeriyasamyED Raid: அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் அரசியல் பயணம் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை:
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி அவரது மகனும், பழனி எம்.எல்.ஏவுமான செந்தில் குமார் மற்றும் மகள் இந்திரா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சென்னை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சோதனை ஏன்?
கடந்த 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் வீட்டு வசதி இலாகா அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீடுகளுக்கான நில ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுதொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான், நில ஒதுக்கீட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து கைது செய்த வரிசையில், தற்போது ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
வழக்கு விவரம்:
முறைகேடா நிலம் ஒதுக்கியதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சேர்த்ததாக அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததோடு, இந்த வழக்கை மீண்டும் 6 மாதங்களுக்குள் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் தற்போது அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஐ.பெரியசாமியின் அரசியல் பயணம்:
- பள்ளி காலம் தொட்டே தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வந்தவர் ஐ.பெரியசாமி
- 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது எம்.ஜி.ஆரை வத்தலகுண்டுக்குள் நுழையவிடமாட்டேன் என அறிவித்து அதிர வைத்தார்
- திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட ஐ.பெரியசாமி முதன் முதலில் வத்தலகுண்டு ஒன்றியத் தலைவரானார்
- 1980-களில் கட்சிக்கு நிதி திரட்டி கொடுப்பதில் ஐ.பெரியசாமி முக்கிய பங்கு வகித்தார்
- 1989 தேர்தலில் முதன் முறையாக ஆத்தூரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்வானார்.
- எம்.எல்.ஏ ஆன பிறகு நடைபெற்ற தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலில் மாயத்தேவர், முத்துசாமியை வீழ்த்தி வெற்றி பெற்றார்
- 1996ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன் முறையாக அமைச்சராக பதவி ஏற்றார்.
- அழகிரியுடன் நெருக்கம் காட்டி வந்தாலும், 2009 மக்களவை தேர்தலுக்கு பிறகு முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக மாறினார்.
- 2021ம் ஆண்டு தேர்தலில் வென்று முதலில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார்.
- பெரியசாமியின் மகனான செந்தில்குமார் தற்போது எம்.எல்.ஏவாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து நடக்கும் இந்த சோதனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு மண்டலத்திலும் திமுகவின் முகமாகவும், நிதி ஆதாரங்களாகவும் திகழும் அமைச்சர்களின் வீடுகளிலேயே சோதனைகள் நடைபெறுவது கவனிக்கத்தக்கதாகும்.





















