விஷால் திருமணம் என்று சொன்னாலே தடங்கல்.. இன்னும் 2 மாசம் தான்.. மனம் உருகிய தந்தை
Vishal Engagement : விஷால் திருமணம் என்று சொன்னாலே தடங்கல் தான் ஏற்படுகிறது என ஜி.கே.ரெட்டி தெரிவித்தார்.

விஷால் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட் தெரிந்துகொள்வதை காட்டிலும் அவரது கல்யாணம் எப்போது என்ற செய்திகள் தான் அதிகம் வெளியாகியுள்ளனர். அவர் எங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினாலும் முதல் கேள்வி திருமணம் எப்போ சார் என்பது. மெளனத்துடன் விஷால் கடந்து சென்ற நாட்களை பார்த்திருப்போம். நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல் லட்சுமி மேனன் வரை காதல் கிசுகிசுவில் சிக்காத நாளே இல்லை. சமீபத்தில் நடிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் அபிநயா தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில், கடந்த மே மாதம் யோகிடா பட ப்ரோமோஷன் விழாவில் சாய் தன்ஷிகா - விஷால் ஆகிய இருவரும் காதலிப்பதை மேடையிலேயே அறிவித்தனர். அப்போதே திருமணம் குறித்தும் தெரிவித்தார்கள். இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த இனிமையான நாளில் காதல் ஜோடியை வாழ்த்திய விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ஒவ்வொரு முறையும் விஷாலின் திருமணம் குறித்து வெளியே சொன்ன மறுகனமே தடங்கல் ஏற்பட்டது. இதுமாதிரி பலமுறை பார்த்துவிட்டோம். அதனால் தான் யாருக்கும் சொல்லாமல் திருமண நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக நடத்தினோம். அதுவும் விஷால் ஆசைப்பட்டு வாங்கிய பிளாட்டில் இந்நிகழ்வு நடக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அங்குதான் நிச்சயதார்த்தம் நடந்தது.
எங்கள் வீட்டில் எல்லோரும் காதல் திருமணம் தான். காதல் திருமணம் என்றால் பெற்றோருக்கு பிரச்னை இல்லை. அவர்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். நடிகர் சங்க கட்டட பணி முடிந்ததும் விஷால் திருமணம் நடைபெறும். நடிகர்கள் கமல், ரஜினி போன்ற பல நடிகர்கல் பணம் கொடுத்துள்ளார்கள். இப்போது அந்த பிரச்னை முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.





















