முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டி துவக்கம்! உங்களுக்கான போட்டிகள் எப்போது, எங்கே? முழு விபரம் இதோ!
விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு (26.08.2025 முதல் 10.09.2025 வரை) மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டி
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியினை மாவட்ட ட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் இன்று (26.08.2025) துவக்கி வைத்தார்.
கிராமப்புற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சிறந்து விளங்கிட வேண்டும்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்துத்துறைகளும் முதன்மைத் துறைகளாக விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, விளையாட்டுத்துறையில், கிராமப்புற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், அனைத்து ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை, சிறப்பான பயிற்றுநர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கி வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட பிரிவில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கூடைபந்து, கபாடி, கையுந்து பந்து, கைப்பந்து, கால்பந்து, தடகளம், சிலம்பம், பூப்பந்து, ஆகிய விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு (26.08.2025 முதல் 10.09.2025 வரை) மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடம்
மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோ-கோ விளையாட்டு போட்டி (28.08.2025 முதல் 31.08.2025 வரை) ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், ஆகியோர்களுக்கான கிரிக்கெட் போட்டியானது (28.08.2025 முதல் 08.09.2025 வரை) சிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியானது (01.09.2025 முதல் 05.09.2025 வரை) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மானாவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கான இறகுபந்து போட்டியானது (01.09.2025 முதல் 08.09.2025 வரை) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உள் விளையாட்டு அரங்கில் நடை பெற உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான, மேசைப்பந்து போட்டியானது (table tennis) (01.09.2025 முதல் 04.09.2025) வரை கணபதி டேபில் டென்னிஸ் அகாடமி (ரெட்டியார் மில்) நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாண மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆகியோர்களுக்கான கேரம் போட்டியானது (28.08.2025 முதல் 03.09.2025) ஜான்டுலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (வி.மருதூர்)நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள், ஆகியோர்களுக்கான செஸ் போட்டியானது (02.09.2025 முதல் 06.09.2025) வரை ஜான்டுவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (வி.மருதூர்) நடைபெற உள்ளது. 03.09.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், 04.09.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும், 05.09.2025 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையத் தளத்தில் பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் தங்கள் விளையாட்டு போட்டி நடைபெறும் நாட்களில் காலை 7.00 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் வருகை புரிந்திட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அவர்களுக்கான Bonafied Certificate, பொதுப்பிரிவினர் இருப்பிட சான்றிதழ், அரசு ஊழியர்கள் அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி அட்டை நகல் மற்றும் அனைத்து பிரிவினரும் ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
வளவே, விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்த அனைத்து வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றிபெற வேண்டும் என ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.




















