“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
”வளர்மதி தலைமையில் நடைபெற்ற முந்தைய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு, அந்த போராட்டங்களே சர்ச்சையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தும் என்பது கடந்த கால வரலாறு”
![“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..! AIADMK Announces Protest Against DMK Government for Failing to Control Crime Against Women and Children headed by Former Minister Valarmathi “மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/13/5a912d3eec9fbc647e193f9eb2af095d1726203526180108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி வரும் 24ஆம் தேதி திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பில் அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்மதியை களத்தில் இறக்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி
வளர்மதி தலைமையில் நடைபெற்ற முந்தைய ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் எல்லாம் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு, அந்த போராட்டங்களே சர்ச்சையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தும் என்பது வரலாறு. அப்படிப்பட்ட நிலையில், மீண்டும் வளர்மதியை திமுக அரசுக்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்க களம் இறக்கிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி வெளியிட்ட அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ”தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அமெரிக்காவில் மோட்டார் பொருத்திய சைக்கிளை மதிப்பதுபோல் நடிக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும் குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளிகள் சர்வ சாதாரணமாக குற்றம் புரிகின்றனர் – எடப்பாடி
மேலும், திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ள அவர், 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும் அறிக்கைகள் வாயிலாகவும் பேட்டிகள் மூலமாகவும் விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்த்து, அதை தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாலியில் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்கள், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், பாலியல் குக்ற்றங்களை தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை இன்று வரை வழங்கவில்லை. மேலும் விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய செயலற்றத் தன்மையால் காவல்துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானது ஆகு என்றும் எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தை அறிவித்த எடப்பாடி
சட்ட ஒழுங்கு பற்றியும் பெண்கள் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் பல்வேறு நிகழ்வுகளை தன்னுடைய அறிக்கையில் பட்டியலிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசரை சார்பில் வரும் 24 – 09 – 2024ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இதனை மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)