Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: கடலூரை தொடர்ந்து சென்னையிலும் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Encounter: சென்னையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு போலீசர் கைது செய்துள்ளனர்.
ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு:
தூத்துக்குடியை சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா எனும் ரவுடியை பிடித்து அவரிடம் இருந்த, நாட்டுத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்தவரம் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி கும்பல் சென்னை ஆதம்பாக்கத்தில் சிக்கியது. அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிண்டியில் பதுங்கி இருந்த மகாராஜாவை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது காலில் குண்டடிபட்டது. இதனால் கீழே விழுந்ததில், கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு:
முன்னதாக நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்திரப்பாடியில் தப்பியோட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ஸ்டீபன் என்ற கொள்ளையனை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியானது. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த ஸ்டீபன் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது திருச்சி, நாகை, தஞ்சை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்ற தடுப்பு நடவடிக்கையா?
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து, பொதுமக்கள் நடமாடி முடியாத அளவில் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி வருகிறார். ஒரே நாளில் 4 கொலைகள், 11 போக்சோ வழக்குகள் பதிவாகும் சூழலில் தான் தமிழ்நாடு இருப்பதாகவும், காவல்துறை மீது பயம் இல்லாமல் போய்விட்டதாகவும் சட்டப்பேரவையிலேயே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். பட்டப்பகலில் சாலையில் மனைவி முன்பே ஒரு ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியுற்றது. இந்நிலையில் தான் நேற்று கடலூர், இன்று சென்னை என அடுத்தடுத்து ரவுடிகள் மீது போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ரவுடிகளை அச்சுறுத்தி, குற்றங்களை தடுக்கவே இந்த நடவடிக்கையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

