ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
மாணவ மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரம் விலையில் தரமான லேப்டாப் விலை இல்லாமல் வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழ்நாட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் ரூ.20 ஆயிரம் மதிப்பில் தரமாக வழங்கப்படும் என்றும் அதற்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் 10 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் லேப்டாப் எப்படி தரமானதாக இருக்கும் என்று நேற்று அதிமுக எம்எல்ஏ தங்கமணி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேரவையில் கூறியதாவது:
’’மாணவ மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரம் விலையில் தரமான லேப்டாப் விலை இல்லாமல் வழங்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மேலும் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் 20 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் லேப்டாப் வழங்கப்பட்டு விடும்’’.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இலவச லேப்டாப்
ஏற்கெனவே பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக ஆட்சிக் காலத்தில் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு, டேப் எனப்படும் மடிக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது பட்ஜெட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

