Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
2025 ஆம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எந்தப் பள்ளியில் படித்தாலும் கட்டாயமாகத் தமிழைப் படித்தாக வேண்டும் என்கிற ஒரு கட்டமைப்பைக் கொண்டு வந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் எந்த வகைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தாலும் தமிழ்ப் பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் சட்டப்பேர்வைக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசியதாவது:
’’முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் காலத்தில்தான் The Tamil Nadu Tamil Leaming Act 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதேபோல 2014-ல் பிளஸ் 2-ல் State Board உடன் மற்ற எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ் என்பது கட்டாயப்படுத்தப்படும் என்ற அரசாணை எண் 145 வந்திருக்கிறது. இது அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றாகத் தெரியும்.
எந்தப் பள்ளியில் படித்தாலும் கட்டாயமாகத் தமிழைப் படித்தாக வேண்டும்
அதை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் 2014-2015 ஆம் ஆண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு, அடுத்தடுத்த கல்வியாண்டில் 6 ஆம் வகுப்பு, 7 ஆஷ்ம் வகுப்பு இப்படி தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எந்தப் பள்ளியில் படித்தாலும் கட்டாயமாகத் தமிழைப் படித்தாக வேண்டும் என்கிற ஒரு கட்டமைப்பைக் கொண்டு வந்திருக்கிறோம்.
புத்தாக்கப் பயிற்சி
அதுமட்டுமல்லாமல், சிபிஎஸ்இ-ஐச் சார்ந்திருக்கிற தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் புத்தாக்கப் பயிற்சியையும் பள்ளிக் கல்வித் துறை வழங்கி இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தனியாக ஒரு refresher course அளிக்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ளதா?
எனினும் நடைமுறையில் இன்னும் தமிழ்ப் பாடம் கட்டாயம் ஆக்கப்படவில்லை. தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006-ஆம் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டப்படி 2015-16ஆம் ஆண்டில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப் பாடமாகியிருக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கால் அது சாத்திமற்றதாகி விட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

