(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: நீதிமன்ற வளாகத்திலே இளம்பெண்ணை சரமாரியாக சுட்ட வழக்கறிஞர்..! நடந்தது என்ன?
தலைநகர் டெல்லியின் தெற்கு டெல்லி மாவட்ட பகுதியில் அமைந்துள்ளது சாகேத் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் காயமடைந்தார்.
தலைநகர் டெல்லியின் தெற்கு டெல்லி மாவட்ட பகுதியில் அமைந்துள்ளது சாகேத் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் காயமடைந்தார். நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞருடன் அந்தப் பெண் நின்றிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
துப்பாக்கிச்சூடு:
டெல்லியில் இதற்கு முன்பும் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் இது மாதிரியான துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். நம்மூரில் எப்படி நீதிமன்ற வளாகங்களில் சில சமயங்களில் குற்றச்சம்பவங்களில் நடப்பதுண்டோ, அதுபோல் வடக்கே நீதிமன்ற வளாக துப்பாக்கிச் சூடுகள் நடப்பதுண்டு. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் அத்திக் அகமது என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூட கூறலாம்.
நடந்தது என்ன?
இன்று காலை 10.30 மணி அளவில் சாகெத் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு இளம் பெண் காயமடைந்து கீழே சரிந்தார். அவரது வயிறு, கைகளில் குண்டு பாய்ந்திருந்தது. அந்தப் பெண்ணை மீட்ட மக்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் ராஜேந்திர ஜா என்பது தெரியவந்ததுது. அவர் உடனடியாக பார் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அந்த இளம் பெண்ணை நோக்கி நான்கைந்து ரவுண்டுகள் சுட அப்பெண்ணுடன் இன்னொரு நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காரணம் என்ன?
துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில், இளம் பெண் ராதா வழக்கறிஞர் ராஜேந்திர ஜாவிடம் பணம் பெற்றுள்ளார். பணத்தை இரட்டிப்பாக்கும் திட்டம் எனக் கூறி வாங்கிவிட்டு ஏமாற்றியுள்ளார். அவர் மீது சட்டப் பிரிவு 420ன் கீழ் சீட்டிங் கேஸ் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தான் அவர் ராதாவை ராஜேந்திர ஜா சுட்டுள்ளார். பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தின் வழியே தப்பிச் சென்றுள்ளார். அவரை பிடிக்க போலீஸ் படையினர் விரைந்துள்ளதாக தெற்கு டெல்லியின் போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்தார். இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு டெல்லி நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்பு பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.