தஞ்சாவூரில் கஞ்சா விற்பனை: பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது, 4.7 கிலோ கஞ்சா பறிமுதல்!
விற்பனைக்காக நாலு கிலோ 700 கிராம் கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் வந்த 3 பேரை சொல்லிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பைபாஸ் அருகில் காரில் விற்பனைக்காக 4 கிலோ 700 கிராம் கஞ்சா கொண்டு வந்த பிரபல ரவுடி உட்பட 3 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் போலீசாருக்கு பைபாஸ் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது என ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை பைபாஸ் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு காரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் விற்பனைக்காக நாலு கிலோ 700 கிராம் கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் வந்த 3 பேரை சொல்லிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் கீழவாடிய காடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் மகேஷ் (33), மதுக்கூர் பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகன் விவேக் (34), பட்டுக்கோட்டை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த அமீர் மைதீன் என்பவரின் மகன் அன்வர் பாட்ஷா (29) என தெரிய வந்தது.
மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ 700 கிராம் கஞ்சா, ரூ.4.20 லட்சம் பணம் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் மகேஷ் போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அவர் மீது முத்துப்பேட்டை போலீசில் எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.






















