Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Air India Plane Crash: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைக் காண அவர், ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 240-க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இதில் பயணித்துள்ளார்.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில், ஏர் இந்திய விமானம் போயிங் 787, இன்று பிற்பகல் 1.17 மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானமானது கட்டுப்பாட்டை இழந்து, மேகனி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்தது. விமானம் புறப்பட்டு, 825 அடி உயரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் மோதி விழுந்ததால், பயிற்சி மருத்துவர்கள் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானத்தில் பயணித்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி
இந்த நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைக் காண அவர், ஏர் இந்தியா விமானத்தில் சென்றுள்ளார். இருக்கை எண் 2 டியில் அவர் பயணித்து உள்ளார். இதுதொடர்பான டிக்கெட் நகலும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் ரூபானியின் நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

பயணித்த பயணிகளில் இதுவரை 110 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் நிலவுகிறது.
யார் இந்த விஜய் ரூபானி?
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான விஜய் ரூபானி, ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை குஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்தார். மியான்மரில் உள்ள ரங்கூனில் 1956ஆம் ஆண்டு பிறந்தவர் விஜய் ரூபானி ஆவார். இவர், லண்டனில் வசிக்கும் தனது மகளைப் பார்க்க விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிர் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.






















