என்னது… 90 டிகிரியில் பாலமா? இனி டிராபிக்கே இருக்காது- 3 லட்சம் பேர் பயன்! எங்கே?
போபாலில் புதிதாக ரூ.18 கோடி மதிப்பீட்டில், 648 மீட்டர் நீளத்திலும் 8.5 மீட்டர் அகலத்திலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதியில் புதிதாக 90 டிகிரியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் டிசைன், பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது.
90 டிகிரி கோணத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம்
போபாலில் புதிதாக ரூ.18 கோடி மதிப்பீட்டில், 648 மீட்டர் நீளத்திலும் 8.5 மீட்டர் அகலத்திலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் 90 டிகிரி கோணத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது, பலரிடம் ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.
ஐஷ்பாக் ஸ்டேடியம் அருகே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மஹமாய் கா பாக், புஷ்பா நகர் மற்றும் நிலையப் பகுதியை, நியூ போபாலுடன் இணைக்கிறது.
இந்த மேம்பாலம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலமும், ஐஷ்பாக் ரயில்வே கிராஸிங்கில் நீண்ட காத்திருப்புகளை நீக்குவதன் மூலமும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் தினந்தோறும் பயனடைவர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமர்சனக் கணைகளை எழுப்பிய கோணம்
அதே நேரத்தில் பாலத்தின் முடிவில் உள்ள கூர்மையான திருப்பம் (90 டிகிரி கோணம்) நேரிலும் ஆன்லைனிலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, இந்த திடீர் வளைவு விபத்து ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மோசமான வானிலை அல்லது வெளிச்சம் குறைவாக இருக்கும்போது இரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
’இந்த வடிவமைப்பு தவிர்க்க முடியாதது’
எனினும் பொதுப்பணித் துறையின் (பாலப் பிரிவு) தலைமைப் பொறியாளர் வி.டி. வர்மா இதை மறுத்துள்ளார். இடப் பற்றாக்குறை காரணமாக இந்த வடிவமைப்பு தவிர்க்க முடியாதது என்றும் மெட்ரோ நிலையம் இருப்பதால் வேறு வழியில்லை என்றும் வர்மா தெரிவித்தார். மேலும் இரண்டு முக்கியமான இடங்களுக்கு இடையே இணைப்பை வழங்குவதே இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டதின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தேவையில்லாத அபாயங்களைக் குறைக்க, பாலத்தில் சிறிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும், மேலும் வேக விதிமுறைகள் உட்பட இந்திய சாலை பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி வண்டிகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















